×

8 நாள் இழுபறிக்கு பின்னர் தீர்வு மபி புதிய முதல்வர் மோகன் யாதவ்: சிவராஜ்சிங் சவுகான் அவுட் 2 துணை முதல்வர்கள் நியமனம்

போபால்: மபி புதிய முதல்வராக மோகன் யாதவ் 8 நாள் கழித்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை முதல்வராக இருந்த சிவராஜ்சிங் சவுகான் வெளியேற்றப்பட்டுள்ளார். 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் மபி, சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜ அமோக வெற்றி பெற்றது. ஆனால் 3 மாநிலங்களிலும் புதிய முதல்வரை தேர்வு செய்ய முடியாமல் பா.ஜ திணறியது. டிச.3ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. அதன் பின் ஒருவாரம் கழித்து நேற்று முன்தினம் சட்டீஸ்கர் பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் சட்டீஸ்கர் புதிய முதல்வராக விஷ்ணு தேவ் சாய் தேர்வு செய்யப்பட்டார். அங்கு முன்னாள் முதல்வர் ராமன்சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 163 இடங்களில் அமோக வெற்றி பெற்ற மத்தியபிரதேச மாநிலத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்ய பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடந்தது.

மபி மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட அரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார், கே. லட்சுமணன், ஆஷா லக்ரா ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மபி புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர் உஜ்ஜைன் தெற்கு தொகுதியில் தொடர்ந்து 3 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் தற்போதைய முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஓபிசி பிரிவு தலைவர் ஆவார். அடுத்த ஆண்டு நடக்கும் மக்களவை தேர்தலை முன்னிட்டு 58 வயதான மோகன்யாதவ் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டதாக பா.ஜ வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம் 2004ம் ஆண்டு முதல்(இடையில் 2018ம் ஆண்டு 1 வருடம் 1 மாதம் கமல்நாத் முதல்வராக இருந்தார்) மபி முதல்வராக இருந்து வந்த சிவராஜ்சிங் சவுகானிடம் இருந்து முதல்வர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்ட மோகன்யாதவுடன், 2 துணை முதல்வர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் தற்போதைய நிதியமைச்சர் ஜெகதீஷ் தேவ்டா, மக்கள் தொடர்பு அமைச்சர் ராஜேந்திர சுக்லா ஆவர். மல்காகார்க் தொகுதியில் போட்டியிட்ட ஜெகதீஷ் தியோரா 59,024 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ரேவா தொகுதியில் போட்டியிட்ட ராஜேஷ் சுக்லா 21,339 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மபி தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டதால், ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து விலகிய நரேந்திரசிங் தோமருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. புதிய முதல்வராக மோகன்யாதவ் தேர்வு செய்யப்பட்டதும், முதல்வராக இருந்த சிவராஜ்சிங் சவுகான் நேற்று மாலை கவர்னர் மங்குபாய் சாகன்பாய் பட்டேலை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். அதை தொடர்ந்து கவர்னரை சந்தித்த மோகன்யாதவ் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

* ராஜஸ்தான் முதல்வர் இன்று தேர்வு

ராஜஸ்தான் பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலிட பார்வையாளர்கள் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங், சரோஜ் பாண்டே, வினோத் தாவ்டே ஆகியோர் இன்று காலையில் அனைத்து எம்எல்ஏக்களையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். மதிய உணவு இடைவேளைக்குபிறகு நடக்கும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் முதல்வருக்கான போட்டியில் முன்னாள் முதல்வர் வசந்துரா ராஜே, ஒன்றிய அமைச்சர்கள் அர்ஜூன் ராம் மெக்வால், கஜேந்திரசிங் ஷெகாவத், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் உள்ளனர்.

* யார் இந்த மோகன்யாதவ்?

* மத்திய பிரதேச மாநில புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோகன் யாதவ், 1965ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி உஜ்ஜைனியில் பிறந்தார். அவரது தந்தை பெயர் பூனம்சந்த் யாதவ். மனைவி சீமா யாதவ். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

* உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள உஜ்ஜைன் தெற்கு தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* 2013ம் ஆண்டு இதே தொகுதியில் முதன்முதலாக எம்எல்ஏவானார். 2018 மற்றும் 2023ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலிலுல் இதே தொகுதியில் வெற்றி பெற்றார்.

* தற்போது நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 12941 வாக்குகள் அதிகம் வெற்றி பெற்றுள்ளார்.

* மோகன் யாதவ் 2020ம் ஆண்டு முதல் சிவராஜ் சிங் சவுகான் அரசில் உயர்கல்வித்துறை அமைச்சராகவும் இருந்து வந்தார்.

* பெரிய படிப்பாளி

புதிய முதல்வராக தேர்வு செய்யபட்டுள்ள மோகன் யாதவ் பெரிய படிப்பாளி என்று கூறப்படுகிறது. பிஎஸ்சி, எல்எல்பி, எம்ஏ, எம்பிஏ, பிஎச்டி உள்ளிட்ட பல்வேறு பட்டங்களை அவர் பெற்றுள்ளார். டாக்டர் மோகன் யாதவ் என்று அவர் அழைக்கப்படுகிறார்.

* என்ன சொல்கிறார் புதிய முதல்வர்?

புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்ட மோகன்யாதவ் கூறுகையில்,’ கட்சியில் நான் ஒரு சிறிய ஊழியர். என்னை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்த உங்கள் அனைவருக்கும், மாநில தலைமை மற்றும் மத்திய தலைமைக்கும் நன்றி என்றார்.

 

The post 8 நாள் இழுபறிக்கு பின்னர் தீர்வு மபி புதிய முதல்வர் மோகன் யாதவ்: சிவராஜ்சிங் சவுகான் அவுட் 2 துணை முதல்வர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mohan Yadav ,Shivraj Singh Chouhan ,Chief Ministers ,Bhopal ,Shivrajsingh ,Shivrajsingh Chouhan ,Deputy Chief Ministers ,Dinakaran ,
× RELATED மபியில் இரவு 10 மணி தாண்டியதால் சவுகான்...