×

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு தொடங்கி விட்டது 10, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை தமிழக அரசிடம் கேட்கப்பட்டுள்ளது: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த அக்டோபர் 27ம் தேதி தொடங்கி கடந்த 9ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 5ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: அக்டோபர் 27ம் தேதி முதல் டிசம்பர் 9ம் தேதி வரையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை தொடங்கியுள்ளது. தற்போதும் பெயர் சேர்த்தல் உள்ளிட்டவற்றுக்கு ஆன்லைனிலும், தாலுகா அலுவலகங்களில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். ஆனால், அந்த விண்ணப்பங்கள் ஜனவரி மாதத்துக்குப்பின் பரிசீலிக்கப்படும். தற்போது பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ள புதிய வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டு வரும் மார்ச் மாதம் வழங்கப்படும். புயல், மழை காரணமாக வாக்குப்பதிவு இயந்திரங்கள்வைக்கப்பட்டுள்ள கிடங்குகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தேசிய வாக்காளர் தின நிகழ்வுக்குப்பின், வாக்குச்சாவடிகள் தோறும் வாகனத்தில் மின்னணு இயந்திரங்களை கொண்டு சென்று, அங்கு மக்களுக்கு வாக்களிப்பது எப்படி என்பதை செய்முறை விளக்கம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் எந்த இடங்கள், எத்தனை நாட்கள் என்பது குறித்த விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் தொடங்கி உள்ளது. இதில் ஒன்றாக, தமிழகத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மற்றும் திருவிழாக்கள், பண்டிகைகள் குறித்த விவரங்களை மாநில அரசிடம் கேட்டுள்ளோம். இந்த விவரங்கள் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டி
வாக்குப்பதிவு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கல்லூரிகள், பள்ளிகளை தொடர்பு கொண்டு மாணவர்கள் மத்தியில் கட்டுரை போட்டி, போஸ்டர் தயாரித்தல் போட்டிகள் நடத்துகின்றனர். இதில் போஸ்டர் தயாரிக்கும் போட்டி முடிந்துவிட்டது. கட்டுரை போட்டிகள் அடுத்த 10 தினங்களில் தொடங்க உள்ளது. ‘இன்லேண்ட் லெட்டரில்’ நாங்கள் வழங்கியுள்ள தேர்தல் தொடர்பான 5 தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அதுகுறித்து கட்டுரை எழுதி, மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் சிறந்த கட்டுரைக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. இதுதவிர பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியரின் அலுவலகங்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள் அலுவலகங்களில் அடுத்த 10 நாட்களில் தலா ஒரு மின்னணு இயந்திரம் வைக்கப்பட உள்ளது. இந்த அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் இந்த இயந்திரங்களை பயன்படுத்தி வாக்களிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

The post நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு தொடங்கி விட்டது 10, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை தமிழக அரசிடம் கேட்கப்பட்டுள்ளது: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil government ,Chief Election Officer ,Satyaprata Sahu ,Chennai ,Tamil Nadu ,Parliamentary Election Organisation ,Satyaprada Saku ,Dinakaran ,
× RELATED செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில்...