×

மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொதுபிரச்சனைகள் தொடர்பாகவும், உதவிகள் வேண்டியும் 371 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 109 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 54 மனுக்களும், வேலைவாய்ப்பு வேண்டி 62 மனுக்களும், பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 93 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 53 மனுக்களும் என மொத்தம் 371 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் மாவட்ட கலெக்டர் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 40 மாற்றுத்திறனாளிகளுக்கான ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 600 மதிப்பில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை வழங்கினார்.

அப்பொழுது திருவள்ளூர் மாவட்டத்தில், மிக்ஜாம் புயலினால் சேதமடைந்த பள்ளி வளாகம் மற்றும் அங்கன்வாடி மையங்களில் தூய்மை பணி மற்றும் மராமத்து பணிகளை மேற்கொண்டு பள்ளி மாணவ, மாணவியர்கள் பாதுகாப்பாக கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை, தமிழ்நாடு கட்டுமானத்தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பணியிடத்தில் விபத்து மரணம் அடைந்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.5 லட்சத்திற்கான காசோலையை இறந்தவரின் வாரிசுதாரர்களான எம்.சுமித்ரா மற்றும் எம்.சுசித்ரா ஆகியோரிடம் மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் வரதராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) தர், சமூக பாதுகாப்புத்திட்டதுணை கலெக்டர் மதுசூதனன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகர் மற்றும் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,People's Grievance Day ,Thiruvallur District Collector ,District Collector ,Dr. ,Prabhushankar ,Dinakaran ,
× RELATED அரசு தொழிற்பயிற்சி மையங்களில் 100% மாணவர் சேர்க்கை : கலெக்டர் அறிவுறுத்தல்