×

திருவேற்காட்டில் மழை பாதிப்பு பகுதிகளை ஆவடி எம்எல்ஏ ஆய்வு

பூந்தமல்லி: திருவேற்காட்டில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சா.மு.நாசர் எம்எல்ஏ, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவேற்காடு நகராட்சியில், மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால், பெரும்பாலான பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவேற்காடு நகராட்சி பகுதிகளை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆவடி எம்எல்ஏ சா.மு.நாசர் ஆகியோர் கடந்த 5 நாட்களாக, ஆய்வு செய்து தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அதன்பேரில், நகர மன்ற தலைவர் மூர்த்தி தலைமையிலான அதிகாரிகள், 25க்கு மேற்பட்ட மின் மோட்டார்கள் மூலம் பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகளில் புகுந்த தண்ணீரை அப்புறப்படுத்தினர்.

மேலும், நகராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டு அயனம்பாக்கம், பொன்னியம்மன் நகரில் மழை நின்ற பிறகும் தண்ணீர் வடியாமல் இருந்தது. இப்பகுதியை பார்வையிட்ட நாசர் எம்எல்ஏ, மழைநீரை உடனடியாக அகற்ற விரைவுப்படுத்தினார். இதனால், என்எல்சி நிர்வாகம் மூலம் கொண்டு வரப்பட்ட ராட்சத மின் மோட்டார் மூலம், தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது. அப்போது, தண்ணீர் வடிந்த இடங்களில் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனைத்தொடர்ந்து நகராட்சி பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மழையால் பாதிக்கப்பட்ட 2,000 பேருக்கு நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டன. நிகழ்வின்போது, நகரமன்ற தலைவர் மூர்த்தி, துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, பொறியாளர் குமார், திமுக நிர்வாகிகள் நரேஷ்குமார், பவுல், ருக்மணி பவுல், துர்காபிரசாத், விநாயகம், செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

The post திருவேற்காட்டில் மழை பாதிப்பு பகுதிகளை ஆவடி எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Avadi ,Tiruvekkad ,Poontamalli ,CM Nassar ,MLA ,Dinakaran ,
× RELATED சென்னை ஆவடியில் சித்த மருத்துவர்...