×

டிஜிட்டல் லாக்கரில் இருக்கும் தகவல்கள் எந்தளவுக்கு பாதுகாப்பானவை? டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்விக்கு மத்திய அரசு பதில்

டெல்லி: பணிபுரியும் நபர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு விவரங்கள் தொடங்கி மத்திய மாநில அரசுகள் வழங்கும் சான்றிதழ்கள், லைசென்ஸ்கள், காஸ் சிலிண்டர் பற்றிய விவரங்கள் என பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைத் தாங்கியிருப்பதுதான் டிஜிட்டல் லாக்கர்.

இதன் பாதுகாப்புத் தன்மை குறித்து மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி., கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நித்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அளித்த பதில்:

மத்திய மாநில அரசுகளின் பல்வேறு சேவைகளை இணையம் மூலமாகப் பெறும் வகையில் நவீன கால அரசு நிர்வாகத்துக்கான ஒருங்கிணைந்த மொபைல் செயலி மற்றும் அரசின் ஆவணங்களைப் பெற வழிசெய்யும் டிஜிட்டல் லாக்கர் போன்றவை செயல்பாட்டில் உள்ளன.

இந்த உமங் செயலி மூலம் மத்திய மாநில அரசுகள் வழங்கும் 1,811 வகையான சேவைகளைப் பொதுமக்கள் பெற முடியும். அதே போல சான்றிதழ்கள் மற்றும் லைசென்ஸ்கள் வழங்கும் அதிகாரம் பெற்ற 1,684 அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் டிஜிட்டல் லாக்கர் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை 628 கோடி ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவை டிஜிலாக்கரில் சேமிக்கப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட நபர்களின் மின்னணு ரீதியிலான ஒப்புதல் இன்றி எவர் ஒருவரும் இந்த ஆவணங்களைப் பார்க்கவோ பதிவிறக்கம் செய்யவோ முடியாது. அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டு, நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படுகிறதா என்பதை சீரான இடைவெளியில் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்கள் மற்றும் ஆவணங்களை சேமித்து வைத்துள்ள டேட்டா பேஸ் உச்சகட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது. எவர் ஒருவரும் நேரடியாக அதை அணுகமுடியாத அளவுக்கு நிரந்தரமான பாதுகாப்பும் அதற்கு உண்டு.

இந்த டிஜிட்டல் லாக்கரில் உள்ள தகவல்கள் மற்றும் ஆவணங்களை நாடு முழுக்க உள்ள ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் பொது சேவைகள் மையங்கள் மூலமாக சம்பந்தப்பட்ட பொதுமக்கள் பெறலாம். இவற்றில் நான்கு லட்சத்து பத்தாயிரம் பொது சேவைகள் மையங்கள் கிராமப் பஞ்சாயத்துப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளதால் கிராமப்புற மக்களும் இந்த வசதிகளை எளிதாகப் பெற முடியும். இவ்வாறு அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

The post டிஜிட்டல் லாக்கரில் இருக்கும் தகவல்கள் எந்தளவுக்கு பாதுகாப்பானவை? டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்விக்கு மத்திய அரசு பதில் appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kanimozhi N. V. N. ,central government ,Somu ,Delhi ,state governments ,Kanimozhi N. V. ,Union Government ,
× RELATED பயிர்கள் நன்றாக வளர்ந்து அதிக மகசூல்...