×

கார் பந்தயம் நடத்துவது அரசின் கொள்கை முடிவு, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது : தமிழக அரசு வாதம்!!

சென்னை: சென்னையில் பார்முலா 4 கார் பந்தய போட்டி நடத்த தடை கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. சென்னை தீவுத் திடலை சுற்றி டிசம்பர் 9, 10ம் தேதிகளில் தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர தெரு பந்தயமாக பார்முலா-4 கார் பந்தய போட்டி நடத்தப்பட இருந்தது. இந்நிலையில், இருங்காட்டுக்கோட்டையில் சர்வதேச அளவிலான பந்தய தடம் இருக்கும் நிலையில், சென்னை மாநகரில் எந்த பகுதியிலும் கார் பந்தயத்தை நடத்தக் கூடாது என்று தடை விதிக்க கோரி மருத்துவர் ஸ்ரீஹரிஷ், லூயிஸ் ராஜ், டி.என்.பி.எஸ்.சி. முன்னாள் உறுப்பினர் பாலுசாமி ஆகியோர் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

மேற்கண்ட மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, மிக்ஜாம் புயல், வெள்ளம் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட பார்முலா 4 கார் பந்தயத்தை வரும் 15, 16ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், “கார் பந்தயம் நடத்துவதற்காக அரசு ரூ.40 கோடி செலவு செய்தது என்பது தவறு. சட்ட அனுமதி இன்றி இந்த பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த பந்தயம் காரணமாக அரசுக்கு எந்த பலனும் இல்லை. போட்டியை நடத்தும் தனியார் நிறுவனம் முதலீடு செய்துள்ள ரூ.200 கோடி, விளம்பரம், அலங்கார மின் விளக்குகளுக்கு மட்டுமே கொடுக்கப்படுவது ஆகும். இதனால் அரசுக்கு எந்த ஒரு லாபமும் இல்லை. பந்தயம் நடத்துவது தொடர்பாக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விதி எந்த அனுமதியும் வழங்கவில்லை. எனவே கார் பந்தயத்திற்கு தடை விதிக்க வேண்டும்,”என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “கார் பந்தயம் நடத்துவது என்பது அரசின் கொள்கை முடிவு. இதனை நீதிமன்றம் ஆராய முடியாது. அரசு இந்த விவகாரத்தில் குறைவாக தான் செலவிடுகிறது. டிக்கெட் விற்பனை மூலமாக அரசுக்கு வருவாய் கிடைக்கிறது,” என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பந்தயம் நடத்தும் தனியார் நிறுவனத்தின் தரப்பில், கார் பந்தயம் நடத்துவதற்கு தங்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் கார் பந்தயம் நடத்தியதன் மூலம் அரசுக்கு ரூ. 630 கோடி வருவாய் கிடைத்துள்ளது, ” என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

The post கார் பந்தயம் நடத்துவது அரசின் கொள்கை முடிவு, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது : தமிழக அரசு வாதம்!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Formula 4 car ,Tamil ,Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...