×

இயேசுவின் பிறப்பு – எளியோருக்கான வாழ்வு!

கிறிஸ்துவம் காட்டும் பாதை

‘‘அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரின் பிறந்திருக்கிறார்’’. லூக்கா 2:10,11

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பாலஸ்தீன பகுதியில் ஆட்டு மந்தையைக் காத்துக் கொண்டிருந்த ஆட்டு இடையர்களிடையே வான்தூதர் காபிரியேல் தோன்றி, ‘‘அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்’’.

லூக்கா 2:10,11 என்று ஆண்டவர் இயேசுவின் பிறப்பை அறிவிக்கிறார். இந்தச் செய்தியைக் கேட்ட மேய்ப்பர்கள் உள்ளத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. இயேசு பிறப்பதற்கு ஏறக்குறைய அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஏசாயா என்ற இறைவாக்கினர் ‘‘இருளில் நடக்கிற மக்கள் பெரிய ஒளியைக் கண்டார்கள். காரிருளின் நாட்டில் குடியிருக்கிறவர்கள் மேல் ஒளி உதித்தது’’.

(ஏசாயா 9:2) என்று ஏழை, எளிய மக்கள் முழு விடுதலை வாழ்வு பெற மேசியாவாகிய விடுதலையாளர் பிறப்பார் என்று எதிர்நோக்கோடு இறைவாக்கு உரைத்தார். இந்த இறைவாக்கு இயேசுகிறிஸ்துவின் பிறப்பின் மூலம் நிறைவேறியது. எனவே, இயேசுகிறிஸ்துவின் பிறப்பின் செய்தி முதலாவது ஏழை, எளிய மக்களின் அடையாளங்களாகிய ஆடுகளை மேய்ப்பவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

மேய்ப்பர்கள் இயற்கையை சார்ந்து வாழ்பவர்கள். நீர்நிலைகள், தாவரங்கள், நிலம் என்ற இயற்கையோடு தொடர்புடைய வாழ்வினை மேற்கொள்பவர்கள். உழைப்பு அவர்களிடம் அதிகமாக இருந்தது. மேய்ப்பர்கள் ஓரிடத்தில் நிலையாய் தங்கி பணி செய்பவர்கள் அல்ல, வெவ்வேறு இடங்களில் பெயர்ந்து செல்கின்றவர்கள். ஏறக்குறைய நாடோடி வாழ்வுதான் அவர்களின் வாழ்வு நிலை. வெயில், மழை இவற்றோடு என்றும் இணைந்து வாழ்பவர்கள்தான் இந்த மேய்ப்பர்கள். இயற்கையோடு, விவசாயத்தோடு மேய்ப்பர்களின் வாழ்வு இரண்டறக் கலந்திருந்தது.

எப்பொழுதும் ஆடுகளை, மாடுகளை மேய்ப்பவர்களை சமுதாயத்தில் கேவலமாக, புறக்கணிக்கப்பட்ட நிலையில் பார்க்கின்ற சூழல் அன்று மட்டுமல்ல இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவர்கள் படிக்காதவர்கள், பாமரர்கள் என்றும், இவர்கள் ஏழைகள், எளியவர்கள் என்றும் ஒதுக்கித்தள்ளும் நிலை காலகாலமாகவே இருந்து வருகிறது. ஆனால், இப்படிப்பட்டோரின் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சிக்குரிய நிலை இயேசுவின் பிறப்பால் வந்தது என்பதை அறிய முடிகிறது. இயேசுவின் பிறப்பு சமுதாயத்தின் அடித்தள நிலையிலிருந்து கூறப்பட்டது.

இயேசுகிறிஸ்து பிறந்த பாலஸ்தீன நாட்டில் அப்பொழுது உரோம ஆட்சியின் ஆதிக்கம் இருந்தது. உரோம ஆட்சிக்கு எல்லாவற்றிலேயும் துணை நின்ற நிலையில் யூத ஆட்சியும் ஒன்று கலந்திருந்தது. எனவே அரசியலும், சமயமும் ஒன்று சேர்ந்து முதலாளித்துவத்தை, அதிகாரவர்க்கத்தை மையப்படுத்தி ஏழை, எளிய மக்களை ஒடுக்கியது.

இந்நிலையில் முழு விடுதலையான சமூகம், அரசியல், சமய, பொருளாதார, கலாச்சார, கருத்தியல் விடுதலைகள் மேய்ப்பர்கள் போன்ற நிலையிலிருந்த ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்காத வேளையில், முழு விடுதலை அளிக்கும் இறைமகனாக இயேசுகிறிஸ்து உங்களுக்காகப் பிறந்திருக்கிறார் என்பது மேய்ப்பர்கள் போன்ற எளிய மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாகக் காணப்பட்டது.

இன்றும் இயேசுகிறிஸ்துவின் பிறப்பை ஏழை, எளிய மக்களின் வாழ்வோடு இணைத்து, அடித்தள நிலையிலிருந்து முழு விடுதலை என்பதை, நாம் அறிந்துகொள்ள வேண்டும். எங்கெல்லாம் அரசியல், சமயம் மூலம் எளிய மக்கள் ஒதுக்கப்படுகிறார்களோ, ஒடுக்கப்படுகிறார்களோ அங்கே இயேசுவின் பிறப்பு நற்செய்தியாக வெளிப்படுகிறது.

இதன்மூலம் எளியோரின் சார்பாளர், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாட அடித்தள ஏழை, எளிய மக்களின் வாழ்வை மகிழ்ச்சிக்கு நேராகக் கொண்டு செல்லுவோம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட மகிழ்ச்சியின் செய்தியை இன்றும் எளியோரோடு பகிர்ந்து அவர்களின் வாழ்வு வளம் பெற ஆவண செய்வோம். ஆண்டவர் நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

பேராயர் தே. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் – மதுரை

The post இயேசுவின் பிறப்பு – எளியோருக்கான வாழ்வு! appeared first on Dinakaran.

Tags : Jesus ,Christianity ,Lord ,Messiah ,
× RELATED சென்னையில் கருவின் பாலினத்தை தெரிவித்ததாக மருத்துவமனைக்கு சீல் வைப்பு