×

புதனுக்குரிய பச்சை மரகதம்

மரகதம் என்ற ரத்தினம் புதன் கிரகத்திற்கும், ஐந்தாம் எண்ணுக்கு உரியது. ஒரு மாதத்தில் 5,14,23-ஆம் நாட்களில் பிறந்தவர்களின் ராசிக் கல் மரகதம் ஆகும். நல்ல மரகதத்தைக் கண்டறிய அந்தக் கல்லை பாலிலோ தண்ணீரிலோ மூழ்க வைத்துப் பார்க்க வேண்டும். பால் அல்லது தண்ணீர் பசுமை நிறமாகத் தெரியும். மரகதத்தின் ஒளி பாலிலும், தண்ணீரிலும் பரவுவதால், பாலில் பசுமை நிறம் தோன்றும். தண்ணீரும் பசுமையாகத் தெரியும்.

புதனின் ஆதிபத்யம்

புதன் கிரகத்தின் பெயரால், புதன்கிழமை அழைக்கப்படுகிறது. புதன்கிரகம் அறிவு, நிதானம், கணக்கு, மொழி, நினைவாற்றல், தகவல் தொடர்பு போன்றவற்றை வாரி வழங்கும் கிரகமாகும். அதன் நிறம் பச்சை என்பதால், அதற்குரிய ரத்தினமாக மரகதம் விளங்குகின்றது. மரகதம் என்ற ரத்தினம், இளம் பச்சை நிறமாக இருக்கும். அடர்ந்த பச்சை நிறமும் உண்டு.

இதன் அடர்த்தி குறைவு. அதனால், எடையும் லேசாக இருக்கும். நொறுங்கும் இயல்புடையது. இதில், குரோமியம் நிறைந்திருப்பதால், பச்சை நிறமாக காட்சியளிக்கின்றது. இந்தக் குரோமியம் குறைந்து போனால், அந்த கல்லை கிரீன் பெரில் (Beryl) என்று அழைப்பர். இதனை சூடாக்கும் போது அது சற்று கடல் நீலத்துக்கு மாறும். அப்போது அக்கல்லை `அக்வா மரைன்’ என்ற உபரத்தினமாக கருதுவர்.

எப்படி அணியலாம்?

மரகதத்தை மோதிரத்தில் பதித்து அணியலாம். கழுத்தில் பதக்கமாகவும், மாலையாகவும், காதுகளில் மரகதகல் பதித்த தோடுகளாகவும் அணியலாம்.

யார் அணியக் கூடாது

துலாம், தனுசு, கும்பம் ராசிக்காரர்கள் மரகதப் பச்சை மோதிரத்தை அணியக் கூடாது.

நோய்கள் தீரும்

மரகதம் அணிவதால் வாய்ப்புண், தொண்டைக் கட்டு, தொண்டை கமறல், தொண்டையில் வரும் தொற்று நோய், நாக்கில் புண், தடிப்பு, வீக்கம், நுரையீரல் தொற்று, வெண்குஷ்டம் போன்ற தோல்நோய் ஆகியவை சுகமாகும். புதனுடன் ராகு சம்பந்தப்பட்டு சனி போன்ற பாவ கிரகங்கள் பார்வை ஏற்பட்டால், அவர்களுக்கு தொண்டையில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. நல்ல ரத்ன சாஸ்திர நிபுணரை பார்த்து, இவர்களும் மரகதம் அணிந்து நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.

மரகதம் தரும் நன்மைகள்

புத்திக்கு உரிய கிரகம் புதன் என்பதனால், புதனுக்குரிய மரகதம் அணியும்போது, தடைபட்ட உயர் கல்வி கிடைக்கும். மொழித்திறன் உயரும். தகவல் தொடர்பு திறன் வளரும். வாதாடும் திறமை அதிகரிக்கும். வசியப் பேச்சு சித்தியாகும். கேலி, கிண்டல், நக்கல், நகைச்சுவை, அங்கதம், நையாண்டி போன்றவை வரும். கணக்கு வழக்கு பார்ப்பதில் தேர்ச்சி உண்டாகும்.

தொழில் சிறக்க உதவும் மரகதம்

புதனுக்குரிய தொழில் செய்பவர்கள், மரகதம் அணிவது தொழிலில் மேன்மையையும், செல்வச் செழிப்பையும் அருளும். மேடைப் பேச்சாளர்கள், வக்கீல், விற்பனை முகவர், கணக்காளர், மாணவர், தொழிலதிபர் போன்றோர் தங்களுடைய வாக்கினால் தொழில் செய்பவர்கள் ஆவர். இவர்கள் மரகதக் கல்லை அணியலாம்.

யாருக்கு பலன் தராது?

ஜாதகத்தில் புதன் வலுவில்லாமல் இருந்தால், நீசமாக இருந்தால், பாவிகளுடன் சேர்ந்து அல்லது பாவிகளின் பார்வை பெற்று இருந்தால், ஜாதகர்களுக்கு பெரியவர்களுடன் அடிக்கடி கருத்து முரண்பாடு உண்டாகும். இதனால், மன அழுத்தமும் மனநோயும் ஏற்படும். நரம்புத்தளர்ச்சி உண்டாகும். தோலில் அரிப்பு சொறி, சொரியாசிஸ், லுகோடெர்மா போன்ற நோய்களும் வரும்.

ரத்ன சாஸ்திரம்

ரசஜலநிதி என்ற நூல் சிறந்த மரகதத்திற்குரிய பண்புகளை விளக்குகின்றது. மரகதம் நல்ல பச்சை நிறமாக, கனமாக, மிருதுவாக, ஒளி வீச்சு உடையதாக வழவழப்பானதாக பிரகாசமாக ஒப்படர்த்தி கூடியதாக இருக்கும். நல்ல மரகதத்தை வாங்குவதற்கு நல்ல ரத்ன சாஸ்திர நிபுணரை அணுகிப் பெற வேண்டும். மட்டமான மரகதக் கல், மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில், கரடு முரடாக, நீல நிறம் கலந்து லேசானதாக, தட்டை வடிவத்தில், அளவற்று, ஓர் ஒழுங்கான வடிவம் இல்லாமல், கருப்பு நிறம் கலந்து காணப்படும்.

வராஹமிஹிரர் கூற்று

வராகமிஹிரர் ஒரு பாடலில் மரகதத்தின் நிறம் மற்றும் அதனை எப்போது பயன்படுத்துவார்கள் என்று எடுத்துரைக்கின்றார்.

`சுக வம்சபத்ர கதலி சீரிஷ
குசும ப்ரபம் குணோ பேதம்
சுர பித்ரு கார்ய மரகதம்
அதீத சுபதர்ம ம்ருணா விகிதம்’

– என்ற பாடலில்

சுகம் – கிளியின் சிறகு, வம்சபத்திர – மூங்கில் இலை, கதலி – வாழைத்தண்டு ஆகியவற்றின், பச்சை நிறத்தில் மரகதம் இருக்கும். மரகதத்தை பித்ரு காரியத்தின் போதும், அதீத சுபகாரியங்கள் செய்யும்போதும், விரலில் அணிவர்.

யார் எப்போ அணியலாம்?

மிதுனம், கன்னி ராசிக்காரர்கள், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், புதன்திசை, புதன் புத்தி நடப்பவர்கள், எல்லா நாட்களிலும் புதன் ஓரையில், குறிப்பாக புதன்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை மோதிர விரல் அல்லது சுண்டு விரலில் மரகத மோதிரத்தை அணியலாம். வலது கை சுண்டு விரலில், ஆண்கள் அணிவது சிறப்பு. இடதுகை சுண்டு விரலில் பெண்கள் அணியலாம். இடது கை சுண்டுவிரலின் கீழே உள்ள மேடு கைரேகை சாஸ்திரத்தின் படி, புதன் மேடு எனப்படும்.

கோயில்களில் மரகதச் சிலை

தமிழ்நாட்டில் பல பெரிய கோயில்களில் உள்ள சிலைகள் மரகதக்கல்லால் ஆனது என்பர். புதன் கிரகத்திற்குரிய ஸ்தலம் ஆகும். தரிசனத்தின்போது அந்த மரகத பச்சைக் கல்லின் ஒளி பக்தர்கள் மீது படுவதால், அவர்களுடைய அறிவும், விவேகமும், நினைவாற்றலும் வளரும். உத்தரகோசமங்கையில் சந்தனக் காப்பிட்ட மரகதக் கல்லாலான ஐந்தரை அடி உயர நடராசர் சிலை உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை ஆருத்ரா தரிசனத்துக்கு முதல் நாள் இரவு, சந்தனம் களையப்பட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும்.

பின்னர், அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். மீண்டும் சந்தனம் பூசப்படும். திருப்பதி கோயிலில் திருப்பதி வெங்கடேஸ்வரப் பெருமாளுக்கு நூறு கேரட் மதிப்புள்ள மரகதப் பச்சை பதக்கம் அணிவதால், அங்கு செல்லும் பக்தர்களுக்கு புதன் பகவானுக்குரிய அறிவும், கல்வியும், ஞானமும் விருத்தி ஆகும். திருவெண்காடு நவக்கிரக ஸ்தலங்களில் புதனுக்குரிய தலமாக விளங்குகிறது. அங்கு புதனுக்கு தனி சந்நதி உண்டு.

தொகுப்பு: பிரபா எஸ். ராஜேஷ்

The post புதனுக்குரிய பச்சை மரகதம் appeared first on Dinakaran.

Tags : Mercury ,
× RELATED கன்னி ராசியின் காதல்