×

அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் அவதூறு பிரசாரம்.. அதிமுக போல் நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டவில்லை: எடப்பாடி, அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!!

சென்னை: முதலமைச்சர் அறிவித்துள்ள ரூ.6,000 பொதுமக்களிடம் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். புயல் மற்றும் வெள்ள நிவாரணம் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர்; சிலர் அரசு மீது விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். முதலமைச்சரின் சீரான தலைமையில் கொரோனா பேரிடர்களை சிறப்பான முறையில் தமிழ்நாடு அரசு கையாண்டது. வடமாநிலங்களில் கங்கை ஆற்றில் பிணங்கள் மிதந்து சென்ற நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா சூழலை திமுக அரசு சிறப்பாக கையாண்டது.

முதலமைச்சரே கவச உடை அணிந்து நேரடியாக சென்று கொரோனா நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவிய நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா எந்த பற்றாக்குறையும் இல்லை. டெல்லியில் உள்ள தலைவர்கள் போல் மணி அடியுங்கள், தட்டை தட்டுங்கள் என்று நாங்கள் கூறவில்லை. இயற்கை பேரிடர் ஏற்பட்டால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக கொரோனா காலத்தில் திமுக அரசு செயல்பட்டது.

தலைவன் என்பவர் முன்னணியில் இருந்து வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பதற்கு ஏற்ப முதல்வர் ஸ்டாலின் களத்தில் நின்று பணியாற்றி வருகிறார். தற்போது ஏற்பட்ட வெள்ள பாதிப்பை சமாளிக்கும் நடவடிக்கைகளையும் களத்தில் நின்று முதலமைச்சர் சிறப்பாக கையாண்டு வருகிறார். 2015-ம் ஆண்டில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முன்னறிவிப்பு இன்றி தண்ணீர் திறக்கப்பட்டதால் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. 2015-ஐ போல் இல்லாமல் தற்போது செம்பரம்பாக்கம் ஏரி உரிய முறையில் கண்காணிக்கப்பட்டு முன்கூட்டியே உபரிநீர் திறக்கப்பட்டதால் சேதம் தவிர்க்கப்பட்டது. அதிமுக ஆட்சியைப் போல் நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதா படத்தையோ, எடப்பாடி பழனிசாமி படத்தையோ திமுக அரசு பதிவு செய்யவில்லை.

மக்களுக்கு தேவையான பொருட்களை உடனுக்குடன் எந்தப் படமும் இன்றி விரைந்து வழங்கினோம்.
2015-ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது ஜெயலலிதா ஒன்றிய அரசிடம் ரூ.10,750 கோடி கேட்டிருந்தார்.
ரூ.10,750 கோடி ஒன்றிய அரசிடம் கேட்ட ஜெயலலிதா, 2015-ல் அறிவித்த நிவாரணம் ரூ.5,000 மட்டுமே. ஆனால், தற்போது ரூ.5,060 கோடிதான் ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கோரியுள்ளார். ரூ.5,060 கோடி ஒன்றிய அரசிடம் கேட்டிருந்தாலும் மக்களுக்கு 2015-ஐ விட ரூ.1,000 அதிகமாக ரூ.6,000 அறிவித்துள்ளோம்.

மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரணம் ரூ.6,000 ஒன்றிய அரசின் நிதியில் இருந்து வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். வெள்ளம் வந்ததும் பாஜக அலுவலகத்தில் கதவை மூடிக் கொண்டு உள்ளே இருந்தவர்கள் தண்ணீர் வடிந்த பிறகு நிவாரணம் வழங்கிவிட்டு அரசை விமர்சிப்பதா?. எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடியும் வெள்ளம் பாதித்திருந்தபோது சேலத்துக்கு சென்றுவிட்டார். கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரும் அண்ணாமலை ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை பெற்றுத் தர வேண்டும்.

புயல் மழை கொட்டிய போதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு இடங்களை பார்வையிட்டு மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தினார். அரசியல் நோக்கத்துக்காகவே எதிர்க்கட்சிகள் அவதூறு பிரச்சாரம் செய்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பெருமளவு உயிர்ச்சேதங்களை அரசு தடுத்திருக்கிறது. சென்னையில் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். வங்கிக் கணக்கில் இருப்புத் தொகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் பிடித்தம் செய்யப்படும் சூழல் இருப்பதால் ரொக்கமாக வழங்கப்படுகிறது. குடும்ப அட்டை இல்லாமல் வேறு ஆவணங்களை சமர்ப்பித்தாலும் உரிய நிவாரணத் தொகை வழங்கப்படும்

மிக்ஜாம் புயலால் சென்னையில் 44 மணி நேரம் இடைவிடாது மழை பெய்தது. அரசின் பணிகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வேண்டும் எனக் கேட்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. அரசின் அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் ஏற்கனவே மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. நீர்வளத்துறை தங்களது பணிகளை சிறப்பாகச் செய்தது காரணமாகவே செம்பரம்பாக்கம் ஏரி நீரால் சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. 2015-ல் மனித தவறால் செயற்கையாக உருவான வெள்ளம் போல் அல்லாமல் தற்போது இடைவிடாது பெய்த மழையால் இயற்கையாக வெள்ளம் ஏற்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

The post அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் அவதூறு பிரசாரம்.. அதிமுக போல் நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டவில்லை: எடப்பாடி, அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!! appeared first on Dinakaran.

Tags : Minister Gold South Rashu ,Edapadi ,Chennai ,Chief Minister ,Minister ,Thangam Thenrarasu ,Storm ,
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு