×

கடமலை – மயிலை ஒன்றியத்தில் அனைத்து கண்மாய்களையும் தூர்வார மக்கள் கோரிக்கை

வருசநாடு : கடமலை – மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்மாய்களையும் தூர்வாரி பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடமலை – மயிலை ஒன்றியத்தில் 12க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இதன்படி கண்டமனூர் புதுக்குளம் கண்மாய், பரமசிவன்கோவில் கண்மாய், மயிலாடும்பாறை அருகே அம்மாகுளம், கடமான்குளம், பெரியகுளம் செங்குளம், கெங்கன்குளம், கோவில்பாறைகண்மாய், வருசநாடு பஞ்சம்தாங்கி கண்மாய், மூலக்கடை சாந்தன்நேரி கண்மாய், ஓட்டனை சிறுகுளம் கண்மாய், கோவிலாங்குளம் கண்மாய் உள்ளிட்ட கண்மாய்கள் விவசாயிகளுக்கு பெரிதும் பலன் அளிப்பதாக உள்ளன.

இப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் இந்த கண்மாய்களில் தண்ணீர் நிரம்புவதால் ஆழ்துளை கிணறுகள், கிணற்று நீர்ப்பாசனம் போன்றவற்றை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு போதிய அளவில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் அவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கண்மாய்களையும் முறையாக தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி ஒன்றியத்தில் எப்பொழுதும் குடிநீர் பஞ்சம் வராமல் பாதுகாக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சில கண்மாய்களை மட்டும் தமிழக அரசு தூர்வாரி உள்ளது. சில இடங்களில் பணிகள் பாதியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மீதமுள்ள கண்மாய்கள் தனிநபர் ஆக்கிரமிப்பால் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. எனவே இப்பிரச்னையில் அதிகாரிகள் தலையிட்டு கண்மாய்களை முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் அங்குசாமி கூறுகையில், ‘‘கடமலை மயிலை ஒன்றியத்தில் தொடர் மழையின் காரணமாக ஆங்காங்கே உள்ள கண்மாய்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த கண்மாய் கரைகளை பலப்படுத்தி, முறையாக தூர்வாரினால் விவசாயத்திற்கு போதிய அளவில் தண்ணீர் கிடைக்கும். இதனை அதிகாரிகள் உணர்ந்து இப்பிரச்னையில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.

The post கடமலை – மயிலை ஒன்றியத்தில் அனைத்து கண்மாய்களையும் தூர்வார மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kadamalai-Maylai union ,Varusanadu ,
× RELATED மூலவைகை கரையோரங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்