×

ஊட்டி ஏடிசி பகுதியில் பள்ளி மைதானத்தை சர்வே செய்து ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை

ஊட்டி : ஊட்டி ஏடிசி பகுதியில் உள்ள அரசு பள்ளி மைதானத்தை சர்வே செய்து ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவற்றை அகற்றி சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ஏ.டி.சி பகுதியில் விளையாட்டு மைதானம் உள்ளது. 2.45 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த விளையாட்டு மைதானம் ஊட்டி அரசு மேல்நிலை பள்ளி கட்டுபாட்டில் உள்ளது. தாவரவியல் பூங்கா சாலையில் எச்ஏடிபி மைதானம் உருவாக்கப்படுவதற்கு முன்பு வரை ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் மைதானத்திலேயே நடைபெற்று வந்தன.

அதன் பின் எச்ஏடிபி மைதானம் அமைக்கப்பட்டதற்கு பிறகு, காந்தி மைதானத்தை அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். பெரிய அளவில் விளையாட்டு போட்டிகள் ஏதுவும் நடத்தப்படுவதில்லை. இந்த சூழலில் சீசன் சமயங்களில் பார்க்கிங் செய்வதற்கும், தீபாவளி சமயங்களில் பட்டாசு கடைகள் அமைக்கவும் என இம்மைதானம் விளையாட்டு அல்லாத பிற நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மைதானத்தை பயன்படுத்த வேண்டும்.

பள்ளி கல்வித்துறை முறையாக மைதானத்தை பராமரிக்க வேண்டும் என கடந்த 2021 சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நுழைவுவாயில் கதவுகள் சரி செய்யப்பட்டன. இதனிடையே மைதானத்தை ஒட்டி செல்லும் கோடப்பமந்து கால்வாயில் தூர்வாறும் பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டன. இதற்காக சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை சுற்றுச்சுவர் சீரமைக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெய்த மழையின் போது எட்டின்ஸ் சாலையில் இருந்த ராட்சத கற்பூர மரம் விழுந்து மைதான சுற்றுசுவர் இடிந்து விழுந்தது. இந்த சுற்றுச்சுவரும் சீரமைக்கப்படாமலேயே இருந்து வருகிறது.

போதிய கண்காணிப்பு இல்லாத நிலையில் இரவு நேரங்களில் மைதானத்திற்குள் நுழைந்து சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. எனவே தற்போதும் 2.45 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானம் உள்ளதா என்பதை நில அளவை செய்து ஆக்கிரமிப்புகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை அகற்றிட வேண்டும். சேதமடைந்த சுற்றுச்சுவர்களை கட்ட வேண்டும்.
இதுதவிர பள்ளி மாணவ, மாணவியர்களுக்கென மாவட்ட அளவில் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளை இங்கு நடத்த வேண்டும் என்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post ஊட்டி ஏடிசி பகுதியில் பள்ளி மைதானத்தை சர்வே செய்து ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ooty ATC ,Ooty ,Dinakaran ,
× RELATED பூங்கா சாலையோர கால்வாயில்...