×

சாலையில் செல்வோர் மீது விழும் வகையில் இருந்த ஆபத்தான கண்ணாடிகளை உடைத்து அகற்றிய தீயணைப்பு வீரர்கள்

*அழகியமண்டபத்தில் உள்ள வணிக வளாகத்தில் பரபரப்பு

குமாரபுரம் : அழகியமண்டபம் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த பிரமாண்ட கண்ணாடி துண்டுகள் சேதமடைந்து சாலையில் செல்வோர் மீது விழும் வகையில் ஆபத்தாக தொங்கிக்கொண்டு இருந்தன. அவற்றை தீயணைப்பு துறையினர் உடைத்து அகற்றினர். தக்கலை அருகே உள்ள அழகியமண்டபம் மிகவும் பரபரப்பான போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியாகும். இப்பகுதியில் இருந்து குலசேகரம் செல்லும் சாலையில், 3 மாடிகளை கொண்ட வணிக வளாகம் உள்ளது. இதில் 2வது மாடியின் முகப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த மிகப்பெரிய கண்ணாடிகள் சேதமடைந்த நிலையில் இருந்தன.

இந்நிலையில் அதில் 3 துண்டுகள் பெயர்ந்து வெளிப்புறமாக சாய்ந்து சாலையில் செல்லும் உயர் மின்னழுத்த கம்பியில் சரிந்து ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டு இருந்தன. கீழே சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இது குறித்து தக்கலை தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து, ஆபத்தான நிலையில் அந்தரத்தில் தொங்கிய கண்ணாடி துண்டுகளை உடைத்து கீழே போட்டு சென்றனர்.இதுபோல வணிக வளாகத்தில் ஆபத்தான நிலையில், உடைந்திருக்கும் மற்ற கண்ணாடி துண்டுகளையும், பெரும் விபத்து நிகழும் முன்பு அகற்ற வேண்டும். மேலும் கீழே உடைத்து போட்ட கண்ணாடி துண்டுகளையும் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலையில் செல்வோர் மீது விழும் வகையில் இருந்த ஆபத்தான கண்ணாடிகளை உடைத்து அகற்றிய தீயணைப்பு வீரர்கள் appeared first on Dinakaran.

Tags : Azhayamandapam Kumarapuram ,Azhayamandapam ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…