×

சிவகங்கை அருகே இடிந்து விழும் நிலையில் வீடுகள்

*புதிதாக கட்டித்தர கோரிக்கை

சிவகங்கை : இடிந்து விழும் நிலையில் உள்ள காலனி வீடுகளுக்கு பதிலாக, புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகங்கை அருகே சித்தலூர் ஊராட்சி மேலக்கோவானூர் கிராமத்தில் இடிந்து சேதமடைந்த நிலையில் காணப்படும் ஆதிதிராவிடர் காலனி வீடுகள் உள்ளன. இங்கு 30 வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் அனைவரும் கூலி வேலை மற்றும் விவசாயம் செய்து பிழைத்து வருகின்றனர். இந்த மக்களுக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.

அந்த வீடுகள் அனைத்தும் தற்போது மோசமாக இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் இக்காலனியைச் சேர்ந்த சிலர், சிவகங்கை மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்குக் சென்று விட்டனர். அதில் சிலர் இடிந்து விழுந்த மேற்பகுதியை சரி செய்து வசித்து வருகின்றனர். ஆனாலும் தொடர் மழை பெய்தால் மேற்பகுதி பெயர்ந்து விழுந்து சிலர் காயமடைத்துள்ளனர்.
வேறு வழியின்றி சேதம் குறைவாக இருக்கின்ற வீடுகளில் தங்கி சிலர் குடும்பம் நடத்தி வருகின்றனர். மேலும் காலனி வீடுகள் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

40 ஆண்டுகளுக்கு முன் கட்டி கொடுக்கப்பட்ட இந்த வீடுகளை அகற்றி புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அங்கு வசித்து வரும் தீர்தம்மாள் கூறியதாவது: 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த வீடுகள் தொடர்ந்து இடிந்து விழுந்து வருகின்றது. நாங்களும் செலவழித்து மராமத்து பணியில் பார்த்தோம். ஆனாலும் பல வருடங்கள் ஆகிவிட்டதால் தொடர்ந்து இடிந்து விழுந்து வருகின்றது.

இதனால் இரவில் கூட சரியாக தூங்க முடியாத நிலையில் பயத்தோடு குடியிருந்து வருகிறோம். அன்றாடம் கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றோம். வீடு கட்டுவதற்கு வசதி வாய்ப்புகள் கிடையாது. ஆகவே எங்களுக்கு இந்த வீடுகள் அனைத்தையும் இடித்து விட்டு புதிதாக வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post சிவகங்கை அருகே இடிந்து விழும் நிலையில் வீடுகள் appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,
× RELATED சட்டவிரோத குவாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?: ஐகோர்ட் கிளை கேள்வி