×

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நடந்த 2ம் நிலை காவலர் பணிக்கான போட்டித்தேர்வில் 7,748 பேர் பங்கேற்பு

*ஐஜி தலைமையில் கண்காணிப்பு

திருவண்்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், 2ம் நிலை காவலர் பணிக்கான போட்டித்தேர்வு 8 மையங்களில் நேற்று நடந்தது. அதில், 7,748 பேர் தேர்வு எழுதினர்.
தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறைகளில் காலியாக உள்ள 3,359 இரண்டாம் நிலை காவலர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது.

10ம்வகுப்பு கல்வித்தகுதியை அடிப்படையாக கொண்டு நடைபெற்ற இத்தேர்வில் பங்கேற்க, திருவண்ணாமலை மாவட்டத்தில் 9,127 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதையொட்டி, திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் கலை அறிவியல் கல்லூரி, கரண் கலை அறிவியல் கல்லூரி, எஸ்கேபி பொறியியல் கல்லூரி, பகவான் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி, சண்முகா கலை அறிவியல் கல்லூரி, எஸ்ஆர்ஜிடிஎஸ் மேல்நிலைப் பள்ளி, சன் கலை அறிவியல் கல்லூரி ஆகிய 8 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

மேலும், காலை 10 மணி முதல் பகல் 12.40 மணி வரை தேர்வு நடைபெற்றது. தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கும் முன்பு, தேர்வு எழுதுவோரை முழுமையாக சோதித்த பிறகே அனுமதித்தனர். கை கடிகாரம், எலக்ட்ரானிக் பொருட்கள், பெண்கள் தலையில் சூடியிருந்த பூக்கள் உள்ளிட்ட அனைத்ைதயும் தேர்வு வளாகத்துக்கு வெளியில் வைத்துவிட்டு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். தேர்வு அறைகள் வீடியோ பதிவு மூலம் கண்காணிக்கப்பட்டது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நடந்த போட்டித்தேர்வில், 7,748 பேர் பங்கேற்றனர். 1,379 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. மேலும், மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்ட 8 தேர்வு மையங்களை, ஐஜி (தொழில்நுட்ப பிரிவு) ஏ.ஜி.பாபு தலைமையில், எஸ்பி கார்த்திகேயன் மற்றும் ஏடிஎஸ்பிகள் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். மேலும், தேர்வு அறை கண்காணிப்பு பணியில் 210 எஸ்ஐகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

தேர்வு எழுதிய பெண்ணுக்கு ஆண் குழந்தை: திருவண்ணாமலை அடுத்த கீரனூர் கிராமத்தில் உள்ள சன் கலை அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2ம் நிலை காவலர் பணிக்கான போட்டித்தேர்வுக்கான மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வு மையத்தில், திருவண்ணாமலை அடுத்த அண்டம்பள்ளம் கிராமத்தைச்சேர்ந்தவர் பெயிண்டர் சதீஷ் மனைவி காளிகா(22) என்பவர் தேர்வு எழுதினார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், இவரது குடும்பத்தினர் தேர்வுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும், போட்டித்தேர்வுக்கு ஏற்கனவே நன்றாக படித்து தயார்படுத்தியிருந்ததால், எப்படியாவது சிரமப்பட்டு தேர்வு எழுதிவிடுகிறேன் என பிடிவாதமாக தேர்வு மையத்தக்கு காளிகா வந்திருந்தார். அதன்படி, தேர்வும் எழுதிக்கொண்டிருந்தார். இந்நிலையில், தேர்வு நடந்துகொண்டிருந்த போது சுமார் 11 மணியளவில் அவருக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது.

அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தேர்வு எழுத முயன்றார். ஆனால், தலைபிரசவ வலி என்பதால், வலியை பொறுத்துக்கொள்ள இயலாமல் துடித்தார். அதனை தொடர்ந்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் மருத்துவமனையின் தொடர் பராமரிப்பில் நலமுடன் உள்ளனர்.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நடந்த 2ம் நிலை காவலர் பணிக்கான போட்டித்தேர்வில் 7,748 பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai district ,IG Thiruvannamalai ,
× RELATED சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி...