×

ரசாயன கழிவுநீர் பக்கிங்காம் கால்வாயில் கலப்பா? மரக்காணம் கடற்கரையில் செத்து மிதக்கும் மீன்கள்

*மீனவ மக்கள் அச்சம்: அதிகாரிகள் ஆய்வு

மரக்காணம் : மரக்காணம் பகுதி கடற்கரையில் 15 கி.மீ. தொலைவிற்கு மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதால் மீனவர்கள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பக்கிங்காம் கால்வாய் உள்ளது. இக்கால்வாய் நீரானது அருகிலுள்ள முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கிறது. கால்வாயில் இருக்கும் மீன்கள், நண்டுகளை உள்நாட்டு மீனவர்கள் மட்டுமல்லாமல் கடற்கரை பகுதி மீனவர்கள் கூட தினமும் பைபர் படகுகளை பயன்படுத்தி மீன் பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதுபோல் பக்கிங்காம் கால்வாயில் நீர் நிரம்பி அதிகளவில் நீர்வாழ் உணவு பொருட்கள் இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளை சார்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய வகை பறவைகள் இப்பகுதிக்கு வந்து இனப்பெருக்கம் செய்து பின்னர் தங்கள் நாடுகளுக்கு திரும்புகின்றன. இதனால் பக்கிங்காம் கால்வாய் பகுதியை தமிழக அரசு பறவைகள் சரணாலயமாக அறிவித்துள்ளது. இப்பறவைகளை பார்ப்பதற்காக ஏராளமான வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பெய்த புயல் மழையால் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளம் கரை புரண்டோடியது. தற்போது மழை நின்று விட்டதால் மழை வெள்ளமும் குறைய துவங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக மரக்காணம் பகுதியிலுள்ள முகத்துவாரத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்துக்கு பக்கிங்காம் கால்வாயில் வாழக்கூடிய பல ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து கடற்கரை ஓரம் ஒதுங்கி உள்ளது. இதனை பார்த்த மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இம்மீன்கள் பருவநிலை மாற்றத்தின் காரணமாக இறந்ததா? அல்லது இறால் குஞ்சு பொரிப்பக ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த கழிவுநீரானது முகத்துவாரத்தின் வழியாக பக்கிங்காம் கால்வாயில் கலந்ததால் இந்த மீன்கள் இறந்து விட்டதா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இப்பகுதியில் கடற்கரை ஓரம் ஒதுங்கி கிடக்கும் மீன்களை வெளிநாட்டு பறவைகள் உண்ணும் நிலை உள்ளது. இதனால் பறவைகளுக்கு பாதிப்பு உண்டாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து பல கிலோமீட்டர் தூரத்துக்கு கரை ஒதுங்கி கிடப்பதால் அவை அழுகி துர்நாற்றம் வீசுகிறது. கரை ஒதுங்கி கிடக்கும் மீன்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அகற்றி புதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ரசாயன கழிவுநீர் பக்கிங்காம் கால்வாயில் கலப்பா? மரக்காணம் கடற்கரையில் செத்து மிதக்கும் மீன்கள் appeared first on Dinakaran.

Tags : Buckingham Canal ,Marakanam beach ,Marakanam ,Dinakaran ,
× RELATED கல்பாக்கம் அருகே பரபரப்பு மர்மமான...