×

தனியார் கம்பெனி அருகே கஞ்சா செடிகள் வளர்த்த தொழிலாளர்கள் கைது

 

அம்பத்தூர், டிச.11: முகப்பேர் அருகே கஞ்சா செடிகள் வளர்த்த 2 வடமாநில தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். முகப்பேர் மேற்கு, ரெட்டிபாளையம் அருகே தனியார் கம்பெனி பகுதியில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக, அம்பத்தூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் தனம்மாளுக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார், சம்பந்தப்பட்ட தனியார் கம்பெனி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த கம்பெனியின் சுற்றுச்சுவர் அருகே 5 அடி உயரமுள்ள 2 கஞ்சா செடிகள் இருப்பது தெரிந்தது. அதை வெட்டி எடுத்தனர். விசாரணையில், அந்த கம்பெனியில் பணிபுரியும் உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த அருண்குமார் (36) மற்றும் அச்செலால் யாதவ் (48) ஆகியோர் கஞ்சா செடிகளை வளர்த்தது தெரிய வந்தது.

இவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திலிருந்து கஞ்சா விதைகளை எடுத்து வந்து, இங்கு அதை செடியாக வளர்த்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் இருக்கும் வடமாநில கட்டுமான தொழிலாளர்களிடம் விற்க முயன்றது தெரியவந்தது. மேலும் மிக்ஜாம் புயல் தாக்கியபோது கஞ்சா செடி சாய்ந்துவிடாமல் இருக்க, பாதுகாத்து வந்ததும் தெரியவந்தது. அவர்களை நேற்று கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post தனியார் கம்பெனி அருகே கஞ்சா செடிகள் வளர்த்த தொழிலாளர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Ambattur ,North State ,Mukappher ,Dinakaran ,
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...