×

மணலி கெமிக்கல் குடோனில் 2வது நாளாக பற்றி எரியும் தீ: கரும்புகை சூழ்ந்ததால் மக்கள் அவதி

 

திருவொற்றியூர், டிச.11: மணலி கெமிக்கல் குடோனில் 2வது நாளாக தீப்பற்றி எரிந்ததால், கரும்புகை சூழ்ந்து கண்ணெரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
மணலி ஆண்டார்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு டயர் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் வைக்கப்பட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக இந்த குடோனில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால், குடோன் பூட்டப்பட்டது. தற்போது மழைநீர் வடிந்துவிட்டதால் கடந்த 8ம் தேதி பிற்பகல், 10க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் குடோனுக்கு வந்து, அங்கு தேங்கியிருந்த சகதிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். நள்ளிரவிலும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது, குடோனில் ஒரு பகுதி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்ததும் தொழிலாளர்கள் அனைவரும் வெளியே ஓடிவந்துவிட்டனர். தீ வேகமாக பரவியதில், குடோனில் இருந்த மூலப் பொருட்கள் அனைத்தும் எரிய தொடங்கியது. மேலும், தீயில் இருந்து கரும்புகை வெளியேறி திருவொற்றியூர், மணலி மற்றும் மணலி புதுநகர் பகுதி உள்பட சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு பரவியதால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டனர்.

தகவலறிந்து மணலி, எண்ணூர் மற்றும் மாதவரம் பகுதிகளில் இருந்து வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் நச்சுத்தன்மை கொண்ட மூலப் பொருட்களும் இந்த குடோன் உள்ளே இருப்பதாகவும் தீ பற்றினால் பெரும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது,
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் நவீன உபகரணங்கள், திரவங்கள் மூலம் நேற்று முன்தினம் முழுவதும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனாலும், தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை. இதனால், காவல்துறை உயரதிகாரிகள், மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், மாநகராட்சி மருத்துவ குழுவினர் வந்து அந்த பகுதியில் முகாமிட்டனர். அந்த குடோனில் தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் தீப்பற்றி எரிந்ததால், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீவிபத்து ஏற்பட்ட குடோனில் இருந்து கரும்புகை சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளதால் பொது மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டது.

The post மணலி கெமிக்கல் குடோனில் 2வது நாளாக பற்றி எரியும் தீ: கரும்புகை சூழ்ந்ததால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Manali Chemical Godown ,Thiruvottiyur ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...