×

வெள்ளத்தில் டூவீலர் சிக்கியது இரவு முழுக்க மரக்கிளையில் தொங்கி பிழைத்த வாலிபர்கள்

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வரிக்கல் சிங்கராஜா தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (33), குப்புசாமிராஜா தெருவை சேர்ந்தவர் வெங்கட்குமார் (25), பிஆர்ஆர் நகரை சேர்ந்தவர் சங்கர் (31). இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் இளந்தோப்பு ஓடை அருகே உள்ள உறவினரின் தோப்பிற்கு சென்றனர். இரவு வெகு நேரமாகி விட்டதால் தோப்பில் தங்கிவிட்டு காலையில் செல்லலாம் என நண்பர்கள் கூறினர். ஆனால் விக்னேஷ், வெங்கட்குமார், சங்கர் மட்டும் இரவே வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டனர். ஓடையில் இரவில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டிருந்தது. இதை கவனிக்காத மூவரும் ஓடையில் டூவீலரில் இறங்கினர். தண்ணீரின் வேகத்தில் மூவரும் டூவீலருடன் இழுத்துச் செல்லப்பட்டனர். சுதாரித்துக் கொண்ட மூவரும் அங்கிருந்த மரக் கிளைகளை பற்றிக் கொண்டு, தங்களை காப்பாற்றுமாறு தொடர்ந்து கூச்சலிட்டனர். யாரும் வராததால் விடிய விடிய மரக்கிளையை பற்றியவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் அவ்வழியாக வந்த ஸ்ரீவர்ஷன் என்பவர், இளைஞர்கள் மூவரும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தவிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ராஜபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த மூவரையும் கயிறு கட்டி சுமார் ஒரு மணிநேரம் போராடி மீட்டனர். அப்பகுதியில் சிக்கியிருந்த டூவீலரையும் மீட்டனர்.

The post வெள்ளத்தில் டூவீலர் சிக்கியது இரவு முழுக்க மரக்கிளையில் தொங்கி பிழைத்த வாலிபர்கள் appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Vignesh ,Varikkal Singaraja Street ,Rajapalayam, Virudhunagar District ,Venkatkumar ,Kuppusamiraja Street ,
× RELATED விளைச்சல் குறைந்ததால் மாங்காய் விலை உயர்வு