×

நீலகிரியில் திடீர் மண் சரிவு சிக்கி தவித்த ஒன்றிய அமைச்சர்

ஊட்டி: நீலகிரியில் கனமழை காரணமாக திடீர் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் செல்ல முடியாமல் தவித்தார். நீலகிரி மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து மழை பெய்து வருகிறது. ஊட்டி, குந்தா பகுதிகளில் மழை குறைவாக இருந்தபோதும், குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. இந்த மழை காரணமாக குன்னூர்-மேட்டுபாளையம் சாலையில் கல்லார் பகுதியில் நேற்று காலை 6 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதித்தது.

இதனை தொடர்ந்து அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டன. தொடர்ந்து சாலை சீரமைக்கப்பட்டு, காலை 9 மணியளவில் மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இந்த நேரத்தில் மேட்டுபாளையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று காலை கல்லார் பகுதிவழியாக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வந்தார். மண் சரிவு காரணமாக செல்ல முடியாமல் அவர் சிக்கி தவித்தார். தகவலறிந்து வந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை அமைச்சர் எல்.முருகன் குடை பிடித்தபடி பார்வையிட்டார். சுமார் 1 மணி நேரத்துக்கு பின்னர் சாலை சீரமைக்கப்பட்டதும் அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

 

The post நீலகிரியில் திடீர் மண் சரிவு சிக்கி தவித்த ஒன்றிய அமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Union minister ,Nilgiris ,Union ,Dinakaran ,
× RELATED கடல் நம்மை பிரித்தாலும் மொழியும்,...