×

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்த சிங்களக் கடற்படையினரின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்த சிங்களக் கடற்படையினரின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 25 மீனவர்களை கைது செய்துள்ள இலங்கைக் கடற்படை இரு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. தனுஷ்கோடி அருகே இராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகு மீது தங்களின் படகை மோதி சிங்களக் கடற்படை சேதப்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் சேதமடைந்த படகில் இருந்த 5 மீனவர்கள் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளனர். சிங்களக் கடற்படையினரின் இத்தகைய அத்துமீறல்கள் கண்டிக்கத்தக்கவை.

கடந்த 7-ஆம் தேதி தான் இராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மீன்வர்கள் 21 பேரை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. அவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் வெற்றி பெறாத நிலையில் மேலும் 25 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடலுக்கு செல்லாத மீனவர்கள் கடந்த சில நாட்களாகத் தான் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அதற்குள்ளாகவே அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் தான் அவர்களை சிங்களக் கடற்படை கைது செய்து வருகிறது என்பதை பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். வங்கக்கடலில் பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது சட்டப்பூர்வ உரிமையாக்கப்பட வேண்டும். இது தொடர்பாக இலங்கை அரசுடன் ஒன்றிய அரசு பேச்சு நடத்த வேண்டும். இப்போது கைது செய்யப்பட்ட 25 மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் வாடும் அனைத்து மீனவர்களையும், இலங்கை அரசிடம் உள்ள அனைத்து படகுகளையும் மீட்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

The post தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்த சிங்களக் கடற்படையினரின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Sinhalese navy ,Anbumani ,Chennai ,Sinhala Navy ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...