×

தமிழகத்தில் உள்ள சைனிக் பள்ளியை தரம் உயர்த்த நிதி ஒதுக்கீடு கோரிய வழக்கில் ஒன்றிய, மாநில அரசுக்கு நோட்டீஸ்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள ‘சைனிக்’ பள்ளியை தரம் உயர்த்த கோரிய வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானல் தாலுகா பூலத்தூர் கிராமத்தை சேர்ந்த சைனிக் பள்ளி முன்னாள் மாணவர் ஏ.ஆர்.கோகுலகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:
ராணுவத்தில் திறமையான வீரர்களை தயார்படுத்த 28 மாநிலங்களில் ‘சைனிக்’ பள்ளிகள் (மாணவர் படைத்துறை பள்ளி) தொடங்கப்பட்டது. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் அமராவதியில் இந்த பள்ளி இயங்குகிறது. இங்கு நுழைவு தேர்வு மூலம் 6, 9ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஒருமுறை தான் நுழைவு தேர்வு எழுத வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. தற்போது இருமுறை எழுதலாம் என்ற நடைமுறை வந்துள்ளதால், கூடுதல் வயதுள்ள மாணவர்கள் 6ம் வகுப்பில் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பள்ளியில் வெளிமாநில மாணவர்களுக்கு 33 சதவீதம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நுழைவு தேர்வு சென்னை, திருநெல்வேலி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் நடைபெற்று வந்தது. தற்போது அமராவதி நகரில் மட்டுமே நடைபெறுகிறது. இதனால், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தற்போது கல்வி கட்டணம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 27 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு தரப்படவில்லை. ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பண பலன்கள் வழங்கவில்லை. இந்த சைனிக் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு எந்த நடவடிக்கையையும் ஒன்றிய அரசு எடுக்கவில்லை. ஆனால், அஜ்மீர், பெங்களூரு, பெல்காம், சால் மற்றும் தோல்பூரில் உள்ள ராஷ்டிரிய ராணுவ பள்ளிகளுக்கு மட்டும் அதிக அக்கறை காட்டுகிறது.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாடு துறை, ராணுவ அமைச்சகம் மற்றும் தமிழக தலைமை செயலாளருக்கு கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி கடிதம் அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஒரு முறை மட்டுமே நுழைவு தேர்வு எழுதும் பழைய நடைமுறையை செயல்படுத்த வேண்டும். சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நுழைவு தேர்வை மீண்டும் நடத்த வேண்டும். பிற மாநில ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும். தேசிய ராணுவ அகாடமி அதிகாரிகளை கொண்டு மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை கற்று தரவேண்டும். பள்ளிக்கு உரிய நிதியை ஒதுக்கவேண்டும். இதுதொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ளும்படி ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வசந்தகுமார் ஆஜராகி, ராணுவ பள்ளிகளுக்கு உரிய நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. இது தொடர்பான ஒப்பந்தம் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் ராணுவ பள்ளிகள் கண்டுகொள்ளப்படவில்லை’ என்றார். சைனிக் பள்ளி சங்க செயலாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மனுதாரரின் கோரிக்கைகளில் பல நிறைவேற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக உரிய விவரங்களை கேட்டு மனு தாக்கல் செய்கிறோம்’ என்றார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர், இந்த மனுவுக்கு பதில் தரவுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதிகள், இந்த வழக்கில் ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் பதில் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை பிப்.2க்கு தள்ளிவைத்தனர்.

 

The post தமிழகத்தில் உள்ள சைனிக் பள்ளியை தரம் உயர்த்த நிதி ஒதுக்கீடு கோரிய வழக்கில் ஒன்றிய, மாநில அரசுக்கு நோட்டீஸ்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Union and State Governments ,Sainik School ,Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED கடற்படை புதிய தளபதியாக தினேஷ் குமார் பதவியேற்பு