×

திருப்பூர் அருகே இரு வேறு இடங்களில் மர்ம விலங்கு தாக்கி நாய்கள் பலி

திருப்பூர்: அவிநாசியை அடுத்து சேயூர் பகுதிகளில் தொடர்ந்து அருகருகே இரு வேறு இடங்களில் மர்ம விலங்கு தாக்கி நாய்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிளாக்குளம் கிராமம், பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த விவசாயி கார்த்தி (31). இவர் தனது குடும்பத்தினருடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டில் செல்லப்பிராணிகளாக 6 மாத குட்டி நாய் ஒன்றும், பெரிய பூனையும் ஒன்றும் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல வீட்டிலிருந்து வெளியில் வந்து பார்க்கும் போது, வழக்கமாக செல்லப் பிராணிகள் படுத்து தூங்கும் இடமான போர்டிக்கோவில் நாய் முகம் சிதைந்து கோரமான விதத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து, உடனடியாக சேவூர் போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் அளித்தார். தகவல் அறிந்த வனக் காவலர் பொம்மன், மற்றும் மான் காவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதன் பிறகு பலியான நாயின் உடலை சேயூர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த வன காவலர்கள் சிறுத்தை கடித்ததற்கான தடயம் எதுவும் இல்லை எனவும், மேலும் அந்தப் பகுதியில் காலடித்தடங்களும் பதியவில்லை ஏதோ ஒரு மர்ம விலங்கு கடித்து நாய் பலியாகி உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தோட்டத்தில் விசாரித்ததில் தற்போது வரை எந்த ஒரு வன விலங்கு நடமாட்டமும் தென்படவில்லை என கூறியதாகவும், தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வருவதாகும் தெரிவித்தனர்,

பிரேத பரிசோதனை செய்த கால்நடை மருத்துவர் பாலசுப்பிரமணியம் கூறும் போது, வன விலங்கு கடித்து தான் நாய் பலியாகி உள்ளது. மேலும் நாக்கு, கழுத்து, முகத்தின் மேல் பகுதி ஆகிய ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மர்ம விலங்கின் பல் தடம் பதிந்து உள்ளது என்றார். அந்த பல் தடம் சிறுத்தையுடயது தான் என்று உறுதி செய்ய முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், சேயூர் ரெயின்போ காலனி பகுதியில் முகம் சிதைந்த நிலையில் நாய் ஒன்று உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்தும் வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து அருகருகே இரு வேறு இடங்களில் மர்ம விலங்கு தாக்கி நாய்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1ம் தேதி சேயூர் அடுத்த போத்தம்பாளையம் பகுதி சென்னியப்பன் காட்டுப்பாறையில் வளர்மதி என்ற பெண்மணி இரண்டு சிறுத்தைகள் நாயை துரத்திக் கொண்டு சென்றதை தனது தோட்டத்திற்கு செல்லும் வழியில் பார்த்ததாக கூறியதை அடுத்து வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறை துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post திருப்பூர் அருகே இரு வேறு இடங்களில் மர்ம விலங்கு தாக்கி நாய்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Avinasi ,Sauer ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் மழை!