×

பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் கிண்டி ஆளுநர் மாளிகையில் சோதனை: பணியில் இருந்த காவலரை அழைத்து சென்றனர்

சென்னை: சென்னை ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் ஆளுநர் மாளிகை முன்பு சோதனை மேற்கொண்டனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் கடந்த மாதம் 25ம் தேதி ஒருவர் பெட்ரோல் குண்டுகளை வீசினார். அப்போது அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த நபரை மடக்கி பிடித்தனர். அதற்குள் அவர் வீசிய பெட்ரோல் குண்டுகள் மாளிகைக்கு வெளியே விழுந்தன. அவரிடம் இருந்த 2 பெட்ரோல் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவர் சரித்திர பதிவேடு குற்றவாளியான நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் என்பதும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ரவுடி கருக்கா வினோத் மீது என்ஐஏ அதிகாரிகள், நவம்பர் 14ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. இதில் கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் என்ஐஏ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக சம்பந்தப்பட்ட ஆவணங்களை சென்னை காவல்துறை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் சில தினங்களுக்கு முன்பு ஒப்படைத்தது.

இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். இதில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை சோதனை மேற்கொண்டனர். இதில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட இடத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தடயவியல் அதிகாரிகள் துணையுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனிடையே, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின் போது பணியில் இருந்த காவலர் சில்வானுவை விசாரணைக்கு என்ஐஏ அதிகாரிகள் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நாளில் என்ன நடந்தது என்பது தொடர்பாக வாக்குமூலம் பெற திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொள்வதால் ஆளுநர் மாளிகை நுழைவுவாயில் முன்பு பாதுகாப்பு பணியில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் கிண்டி ஆளுநர் மாளிகையில் சோதனை: பணியில் இருந்த காவலரை அழைத்து சென்றனர் appeared first on Dinakaran.

Tags : National Security Agency ,Guindi Governor's House ,Chennai ,Governor's House ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...