மதுரை: காப்பீடு நிறுவன நெட்வொர்க் அல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் காப்பீட்டு தொகை வழங்க மறுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்கான காப்பீட்டு தொகை தரக்கோரி மணி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளை மனு தாக்கல் செய்திருந்தார். புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் நிர்வாக அதிகாரியாக இருந்து 2010-ல் ஓய்வு பெற்றேன். ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மருத்துவக் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2016-ல் 7 நாட்கள் வரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். மருத்துவ செலவுக்கான தொகையை வழங்கக் கோரிய விண்ணப்பத்தை காப்பீட்டு நிறுவனம் நிராகரித்தது. காப்பீடு நிறுவனம் தனக்கு காப்பீட்டு தொகையை வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாரர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் மனுதாரர் எடுத்த சிகிச்சையின் உண்மைத் தன்மை மறுக்கப்படவில்லை என்று ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சிகிச்சை உண்மையானது என கண்டறியப்பட்டவுடன் மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்க எந்த காரணமும் இல்லை. ஓய்வூதியர் எடுத்துக் கொண்ட சிகிச்சைக்கு காப்பீடு வழங்க இயலாது என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 6 வாரத்துக்குள் மனுதாரருக்கு காப்பீட்டு தொகையை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.
The post காப்பீடு நிறுவன நெட்வொர்க் அல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் காப்பீட்டு தொகை வழங்க மறுக்கக் கூடாது: ஐகோர்ட் கிளை கருத்து appeared first on Dinakaran.
