×

ஆபத்து களைவார் ஆபத்சகாயேஸ்வரர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஆடுதுறை

காவிரித்தாய் வளமாக்கும் திருவூர்கள் நிறைந்த சோழநாட்டின் தேவாரத் தலங்களுள் தென்கரை மீது 31-வது தலமாக அமையப் பெற்றுள்ளது தென் குரங்காடுதுறை. தற்போது இத்தலம் ஆடுதுறை என்று அழைக்கப்படுகிறது. சோழதேசத்தில் இரண்டு குரங்காடுதுறைகள் உண்டு. ஒன்று காவிரியின் வடகரையின் மீது திருவையாறுக்கு அருகில் உள்ள வடகுரங்காடுதுறை; மற்றொன்று ஆடுதுறை எனப்படும் இந்த தென்குரங்காடுதுறை.

எதிரியின் பாதிபலத்தைப் பெற்றுவிடும் வரம் பெற்ற வாலிக்கு பயந்து, இத்தலத்தில் தஞ்சம் புகுந்த சுக்ரீவன் இத்தல இறைவனை வழிபட்டதால் இப்பதி குரங்காடுதுறை என்றானது. காவிரியின் தென் பகுதியில் அமைந்ததால் தென் குரங்காடுதுறை. தன்னை பூஜித்த சுக்ரீவனை அன்னப் பறவையாக மாற்றி, அவனை ஆபத்திலிருந்து மீட்டார் ஈசன். இதன் காரணமாக இத்தல ஈசன் ஆபத்சகாயேஸ்வரர் என்று போற்றப்படுகிறார்.

ஒரு சமயம் கயிலை மலையில் கல்லும் கரைந்துருகும்படி இசை பாடிக் கொண்டிருந்தார் அனுமன். அவ்வழியே வந்த நாரதர் இசையைக் கேட்டு மெய்மறந்து அமர்ந்துவிட்டார். பின் அவர் புறப்படும்போது கீழே வைத்திருந்த மஹதி எனும் வீணை மீது பனி மூடியதால் அதை எடுக்கமுடியாமல் தவித்தார். அதற்குக் காரணமான அனுமனை நோக்கி, ‘நீ கற்ற இசையை மறப்பாய்’ என சபித்தார். இதனால் மனம் வருந்திய அனுமன், சுக்ரீவன் வழிபட்ட இத்தலம் வந்து, ஆபத்சகாயேஸ்வரரை மனமுருகி வழிபட்டார். சாபத்தால் மறந்த இசை ஞானத்தை மீண்டும் பெற்றார்.

கஞ்சனூரில் வாழ்ந்த ஹரதத்தர், தினமும் கஞ்சனூர், ஆடுதுறை உட்பட ஏழு சிவாலயங்களை தரிசிப்பது வழக்கம். ஒருமுறை அவர் ஆடுதுறையை வழிபட்டு விட்டுத் திரும்புகையில் கடும் மழை பெய்தது. இருள் சூழ்ந்தது. வழியறியாது திகைத்து நின்ற அவருக்கு வயோதிகர் வடிவம் கொண்டு கையில் கோலைத் தாங்கி வழித்துணையாகச் சென்று இல்லத்தில் விட்டு வந்துள்ளார் இத்தல ஈசன்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் இத்தலம் மீது பாடியருளியுள்ளனர். அருணகிரிநாதர் இத்தல முருகன் மீது திருப்புகழ் பாமாலை ஒன்றைச் சூட்டியுள்ளார். கோயிலுக்கு முன்பு சகாய தீர்த்தக் குளம் அமைந்துள்ளது. இரண்டு சுற்றுகள் கொண்ட இவ்வாலயம், அழகிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் காணப்படுகிறது.

முதலில் துவார கணபதி, நந்தி, பலிபீடம், கொடிமரம் என்று வரிசை. பின்னர், வெளிப்புற மண்டபம். அதைக் கடந்து செல்ல மகாமண்டபம் மூடுதளமாக உள்ளது. இடப்புறம் அம்பிகை சந்நதி. கருவறையில் சிறிய வடிவத்தில் சிரித்த வண்ணம் அருள்கிறாள், பவளக் கொடியம்மை.

மீண்டும் மகாமண்டபம் வந்து நேராக நடக்க இடை மண்டபம் வருகின்றது. வாயிலின் மேல் மாடத்தில் சுக்ரீவனை இறைவன் அன்னப் பறவையாகவும், அவன் துணைவியை பாரிஜாதம் என்னும் பவள மல்லிகை மரமாகவும் உருமாற்றியருளிய தலவரலாறு, சுதை வடிவில் காட்சியளிக்கிறது. அதன் வலப்புறத்தில் வெளியே செல்ல வழி அமைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக அர்த்த மண்டபம், மூலஸ்தானம். மூலஸ்தானத்தில் அற்புத லிங்கத் திருமேனி கொண்டு கருணை பொழிகிறார் ஆபத்சகாயேஸ்வரர். ஆபத்தென்று வருவோர் தம் துயர் நீக்கி ரட்சித்தருள வல்லவர்.

சுவாமி கருவறை, அகழி அமைப்புடையது. தேவ கோஷ்டத்தில் முறையான தெய்வங்களை தரிசிக்கிறோம். பிள்ளையாரின் தனி சந்நதி, நிருருதி மூலையிலும், முருகன் சந்நதி, வாயு மூலையிலும் அமைந்துள்ளன. கந்தன் ஆறுமுகப்பெருமானாக தனது இரு மனைவியரோடு அற்புதமாகக் காட்சியளிக்கிறார்.

பின் வரிசையில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நால்வர், கஜலக்ஷ்மி ஆகியோர் சிலை வடிவங்களைக் காணலாம். இத்தல துர்க்கை மிகவும் விசேஷமானவள். தன்னை வந்து சரணடைவோர் தம் வினைகள் யாவையும் அகற்றி, அருள்புரிந்து காக்கின்றாள். அனைத்து வசதிகளும் உள்ள இத்தலம், தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்காவில் கும்பகோணம் – மயிலாடுதுறை இடையே பேரூராக விளங்கி வருகிறது.

தொகுப்பு: ஜி.ராகவேந்திரன்

The post ஆபத்து களைவார் ஆபத்சகாயேஸ்வரர் appeared first on Dinakaran.

Tags : Apadsakayeswarar ,Aduthurai ,Kaviritai ,Tenkarai ,Devar ,Cholanath ,Thiruvoors ,
× RELATED ஆடுதுறையில் விவசாயிகளுக்கு நெல் சாகுபடிக்கான இடுபொருட்கள் வழங்கல்