×

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்.. ரவுடி கருக்கா வினோத்தை 5நாள் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏ. மனு..!!

சென்னை: ரவுடி கருக்கா வினோத்தை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த அக்டோபர் 25ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது ஒரு நபர் பெட்ரோல் குண்டுகளை வீச முயன்றார். ஆளுநர் மாளிகையின் வெளியே பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். அதற்குள் அவர் வீசிய பெட்ரோல் குண்டுகள் மாளிகைக்கு வெளியே விழுந்தன. மேலும், அவரிடம் இருந்த 2 பெட்ரோல் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர், அவரைக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் என்பதும், இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழு இன்று சம்பவ நடைபெற்ற கிண்டி ஆளுநர் மாளிகை இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி கருக்கா வினோத்தை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. மனு தாக்கல் செய்துள்ளது. சம்பவம் நடந்த அன்று கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசியதை பார்த்ததாக கூறும் ஆயுதப்படை காவலர் சில்வானிடமும் என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. ஆயுதப்படை காவலர் சில்வானை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்.. ரவுடி கருக்கா வினோத்தை 5நாள் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏ. மனு..!! appeared first on Dinakaran.

Tags : Bombing ,Rawudi Karuka Vinom ,Chennai ,Dinakaran ,
× RELATED மதுரை மாவட்டம் மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை!