×

வீடுகளில் கருப்பு கொடி கட்டி மக்கள் போராட்டம்

நாமகிரிப்பேட்டை, டிச. 9: நாமகிரிப்பேட்டை அடுத்த பெருமாகவுண்டம்பாளையம் கிராமத்தில், அரசு நில ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்றாததை கண்டித்து, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர். மகிரிப்பேட்டை அடுத்த பெருமாகவுண்டம்பாளையம் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் சில நபர்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகட்டி உள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், கலெக்டர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, கலெக்டர் உமா, பிரச்னைக்குரிய பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இரு தரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை, தாமாகவே முன்வந்து அகற்ற வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று தங்களது வீடுகளுக்கு முன்பு கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்த அதிகாரிகள், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு இருந்தால், சட்டப்படி அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post வீடுகளில் கருப்பு கொடி கட்டி மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Namakrippet ,Perumagoundampalayam ,Namakirippet ,
× RELATED சாலையில் பெருக்கெடுத்து ஓடிய 1.5 லட்சம் முட்டைகள்