×

விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வேளாண்மை இணை இயக்குனர் வழங்கினார்

 

ஆண்டிமடம்,டிச.9: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானாவாரி வேளாண்மை மேம்பாடு- ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாலையா இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கி பேசுகையில், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த இணைத்தொழில்களை சூழ்நிலைக்கேற்ப தேர்ந்தெடுத்து மேற்கொள்வதே ஒருங்கிணைந்த பண்ணையம் ஆகும்.

மானாவாரி சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆண்டு முழுவதும் விவசாயத்தொழிலை மட்டுமே நம்பி இருக்க முடிவதில்லை. ஒருங்கிணைந்த பண்ணையம் மூலமாக நிலையான நீடித்த வேலை வாய்ப்புகள், உற்பத்திச் செலவு குறைவு, சரிவிகித உணவு கிடைத்தல், உற்பத்தித் திறன் மேம்பாடு, உயர்ந்த வாழ்க்கைத் தரம், பண்ணைக் கழிவுகளின் மறுசுழற்சி, அதிக வருமானம், அதிகரித்த நில உபயோகம் போன்ற நன்மைகள் கிடைக்கின்றன. இத்திட்டத்தின் கீழ் பயிர் செயல் விளக்கம், கறவை மாடு கொள்முதல், மண்புழு உர படுக்கை அமைத்தல், தேனீ பெட்டி அமைத்தல், பழமரக்கன்றுகள் நடவு போன்ற மானிய இனங்கள் உள்ளன என கூறினார்.

வேளாண்மை துணை இயக்குனர் பழனிச்சாமி, திட்டத்தில் வழங்கப்படும் உயிருரங்கள் நுண்ணுரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், மண்புழு உர படுக்கை அமைப்பு மற்றும் இதர இடுபொருட்களை பயன்படுத்துவது குறித்து விவசாயிகளிடம் கூறினார். ஒருங்கிணைந்த பண்ணையை தொகுப்பில் உள்ள விவசாயிகள் செயல் விளக்கத்தினை சிறப்பாக அமைத்து மற்ற விவசாயிகளுக்கு முன்மாதிரியாக விளங்கிட கூறினார். இந்நிகழ்வின் போது ஆண்டிமடம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி, வேளாண்மை அலுவலர் ராதிகா, வேளாண்மை உதவி அலுவலர்கள் பழனிவேல், சந்தோஷ்குமார் மற்றும் இடைநிலை உதவியாளர் கபிலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வேளாண்மை இணை இயக்குனர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Antimadam ,District Agriculture Extension Center ,Ariyalur District ,Dinakaran ,
× RELATED மனைவியுடன் பஸ்சில் வந்த டிரைவர் திடீர் சாவு