×

பாலக்காடு அருகே காட்டு யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம்: கிராம மக்கள் பீதி

பாலக்காடு: பாலக்காடு தோணி பகுதியில் காட்டு யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால், கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். கேரள மாநிலம் பாலக்காடு அருகே வனப்பகுதியையொட்டி தோணி, புதுப்பரியாரம், முட்டிக்குளங்கரை, ஒலவக்கோடு ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோணி கிராமத்திற்குள் பி.டி.7 என்ற காட்டுயானை புகுந்து ஊர்மக்களை அச்சுறுத்தி வந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் மயக்கி ஊசி செலுத்தி காட்டு யானையை பிடித்தனர். அந்த யானையை வனத்துறையினர் தோணி வனத்துறை அலுவலக வளாகத்தில் தனிக்கூண்டு அமைத்து பராமரித்து வருகின்றனர்.

தற்போது தோணி கிராமத்துக்குள் மீண்டும் ஒரு காட்டு யானை புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள மரவள்ளி, தென்னை, பாக்கு, வாழை மற்றும் ரப்பர் ஆகியவற்றை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள், கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியே வரும் காட்டு யானை ஊருக்குள் நடமாடும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது வனத்துறையினர் யானை நடமாட்டத்தை கண்காணித்து வனத்திற்குள் விரட்டி வருகின்றனர்.

The post பாலக்காடு அருகே காட்டு யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம்: கிராம மக்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Palakkad Atakasam ,Palakkad ,Palakkad Dhani ,Kerala ,
× RELATED குழல்மந்தம் அருகே தேர்தல் விதிகளை மீறி மது விற்பனை செய்த பெண் கைது