×

கச்சா எண்ணெய் விவகாரத்தில் மோடியை மிரட்டவோ கட்டாயப்படுத்தவோ முடியாது: ரஷ்ய அதிபர் புடின் பேச்சு

மாஸ்கோ: கச்சா எண்ணெய் விவகாரத்தில் பிரதமர் மோடியை மிரட்டவோ அல்லது கட்டாயப்படுத்தவோ முடியாது என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார். ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் பேசுகையில், ‘இந்தியா – ரஷ்யா இடையேயான உறவுகள், அனைத்து துறைகளிலும் வலுப்பெற்று வருகிறது. இதற்கு பிரதமர் மோடியின் கொள்கையே முக்கிய காரணம். உக்ரைனில் போருக்குப் பிறகும், ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குகிறது. இதனை சிலர் மறைமுகமாக விமர்சித்து வருகின்றனர். இந்திய மக்களின் தேசிய நலன்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவரை மிரட்டவோ அல்லது கட்டாயப்படுத்தவோ முடியாது.

இவ்விசயத்தில் பல நாடுகள் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்து வருகின்றன என்பது எனக்கு தெரியும். ஆனால் அது சாத்தியமாகாது. உண்மையைச் சொல்வதென்றால், இந்திய மக்களின் நலன்களைப் பாதுகாக்க, எவ்வளவு கடுமையான நிலைப்பாட்டையும் மோடி எடுத்து வருவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது’ என்று கூறினார். ரஷ்யாவில் இருந்து இந்தியாவிற்கு மாதம் 60 மில்லியன் பீப்பாய் அளவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி, ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதியில் கால் பங்கை இந்தியா வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post கச்சா எண்ணெய் விவகாரத்தில் மோடியை மிரட்டவோ கட்டாயப்படுத்தவோ முடியாது: ரஷ்ய அதிபர் புடின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Modi ,President ,Putin ,Moscow ,President Putin ,
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...