×

ஏன் எதற்கு எப்படி?: வாஸ்து முறைப்படி வீட்டில் வண்ணம் அடிக்க சிறந்த நிறங்கள் எவை?

ஏன் எதற்கு எப்படி?

?தீபாவளி நாளில் கண்டிப்பாக புத்தாடைதான் அணிய வேண்டுமா?
– மணிகண்டன், திருவள்ளூர்.

நிச்சயமாக. அன்றைய தினம் அதிகாலைப் பொழுதில் நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் ஸ்நானம் செய்வதை கங்கா ஸ்நானம் என்று அழைக்கிறார்கள். கங்கையில் ஸ்நானம் செய்தால் பாவங்கள் தொலைவது போன்ற பலனை இந்த தீபாவளி நாளில் செய்யும் வெந்நீர் குளியல் ஆனது நமக்குத் தருகிறது. பாவங்கள் தொலைந்து புத்துணர்வுடன் இருக்கும் சமயம் பழைய வஸ்திரங்களை அணிந்தால் எப்படி? அதிலும் நாம் ஏற்கெனவே அணிந்த பழைய ஆடையில் வியர்வையின் மூலம் நம்முடைய துர்குணங்களும் தோஷங்களும் ஒட்டிக் கொண்டிருக்கும்.

“நூதன வஸ்த்ரஹா ஷட்தோஷ நிவாரணம்’’ என்று சொல்வார்கள். புதிய ஆடையானது ஆறுவிதமான தோஷங்களைக் களைகிறது என்பது அதன் பொருள். உறக்கம், சோர்வு, பயம், கோபம், சோம்பல்தன்மை மற்றும் காலம் தாழ்த்திச் செயல்படுதல் போன்ற தோஷங்கள் புதிய வஸ்திரத்தை அணிவதன்மூலம் காணாமல் போகும் என்பதால்தான் தீபாவளி நாளில் புதிய வஸ்திரத்தை அணிந்துகொள்ள வேண்டும் என்ற பழக்கத்தினை கொண்டிருக்கிறோம். எளிமையான கதர் ஆடையாக இருந்தாலும் சரி, விலை உயர்ந்த பட்டாடையாக இருந்தாலும் சரி தீபாவளி நாளில் புதிய ஆடைதான் அணிய வேண்டும்.

?சிலர் வீட்டில் வாஸ்து மீன் என்று சொல்லி ஒரு மீனை வளர்க்கிறார்களே அதன் பயன் என்ன?
– ச.கோபி, சென்னை.

நமது இந்திய ஜோதிட முறைப்படி வாஸ்து மீன் என்ற ஒரு விஷயமே கிடையாது. இந்த வாஸ்து மீன்களின் பெயர்களை கேட்டாலே நமக்கு உண்மை என்பது புரிந்துவிடும். டிராகன்ஃபிஷ், கோல்டுஃபிஷ், பிளாக்மூர், ஃப்ளவர்ஹார்ன் போன்ற விலையுயர்ந்த மீன்களை வாஸ்து மீன் என்று சொல்கிறார்கள். இவைகள் எதுவுமே இந்தியப் பெயர் இல்லையே! வாஸ்து என்பது சிற்ப சாஸ்திரம் மற்றும் கட்டிடக்கலையின் ஓர் அங்கம். மீன்கள் என்பது ஆறு, குளம், ஏரி, கடல் போன்ற நீர்நிலைகளில்தான் வசிக்க வேண்டும். வீட்டிற்குள் ஒரு தொட்டியில் மீன் வளர்ப்பது நம்முடைய மனதுக்கு இனிமையே தவிற வாஸ்த்துவில் அப்படியொரு விஷயமில்லை.

?வாஸ்துபடி ஒரு வீட்டில் தண்ணீர் தொட்டிகள் அல்லது செப்டிக் டேங்குகள் எந்த இடத்தில் இருக்க வேண்டும்?
– சண்முகம், மதுரை.

தண்ணீர்த் தொட்டி என்று வரும்போது அதனை இரண்டு வகையாக பிரிக்கலாம். `சம்ப்’ என்று அழைக்கப்படும் தரைக்குக் கீழே அமைக்கப்படுகின்ற சுத்தமான நீரை சேமித்து வைக்கும் தொட்டியை வடக்கு அல்லது வடகிழக்கு திசையிலும், வருண மூலை என்று அழைக்கப்படும் மேற்கு திசையிலும் அமைக்கலாம். ஓவர் ஹெட் டேங்க் என்றழைக்கப்படுகின்ற மொட்டை மாடியில் கட்டமைக்கும் தொட்டி அல்லது சின்டெக்ஸ் போன்ற தொட்டிகளை தென்மேற்கு மூலையில் அமைக்க வேண்டும். செப்டிக் டேங்க் என்றழைக்கப்படும் தரைக்குக்கீழே கழிவுகளை சேமிக்கும் தொட்டியினை வீட்டின் வாயு மற்றும் நிருதி மூலை களில் அதாவது வடமேற்கு அல்லது தென்மேற்கு திசைகளில் அமைக்க வேண்டும்.

?வாஸ்து முறைப்படி ஒரு வீட்டில் பணம், நகை, துணிமணிகளை வைத்துக் கொள்ளும் பீரோவானது எங்கு அமைய வேண்டும்?
– வி.சித்ரா, கடலூர்.

முதலில் இவை மூன்றையும் ஒன்றாக வைக்கலாமா என்பதைத் தெரிந்துகொள்வோம். பணம், நகை இரண்டையும் ஒன்றாக ஒரே பீரோவில் வைக்கலாம். இதில் நாம் அணியும் ஆடைகளை வைக்கக் கூடாது. ஏனென்றால் நாம் ஒரு முறை அந்த ஆடையை அணிந்தாலே நமது வியர்வையின் மூலம் நமக்குள்ளே இருக்கும் துர்குணங்களும் தோஷங்களும் அந்த ஆடையில் ஒட்டிக்கொள்ளும். வியர்வையில் சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பார்கள். நாம் ஒரு முறைகூட அணிந்து பார்க்காத புத்தம்புதிய விலை உயர்ந்த பட்டு ஆடைகளை வேண்டுமானால் பணம் மற்றும் நகை உள்ள பீரோவில் வைக்கலாம்.

மற்றபடி பணம், தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களை வைப்பதற்கு என்று தனியாகத்தான் ஒரு பீரோ அல்லது அலமாரியை அமைத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக இது குபேர மூலை என்று அழைக்கப்படும் வடக்கு திசையில் உள்ள அறையில் வைத்துக்கொள்வது நல்லது. வீட்டில் வடக்குத் திசையில் அறை ஏதும் இல்லை என்றால் நீங்கள் எந்த அறையில் பீரோவை வைக்கிறீர்களோ அந்த அறைக்குள் வடக்கு திசையில் வைப்பதும் செல்வ வளர்ச்சியைத் தரும்.

?வாஸ்து முறைப்படி வீட்டில் வண்ணம் அடிக்க சிறந்த நிறங்கள் எவை?
– ஆர்.மாலா, வேலுர்.

லேசான வெளிர்நிறங்களே சிறந்தவை. இவைதான் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவதோடு, கஷ்டமான நேரத்திலும்கூட மனதை இலகுவாக வைத்திருக்கும். குடியிருக்கும் வீட்டிற்குள் வெள்ளை, வெளிர் மஞ்சள், ஐவரி, சந்தன நிறம் போன்றவை நன்மை தரும். வீட்டின் வெளிப்புறத்தைப் பொறுத்தவரை வெள்ளை மற்றும் காவி நிறத்தில் பட்டை பட்டையாக அந்த நாட்களில் வண்ணம் அடித்து வைத்திருப்பார்கள். தற்காலத்தில் அதுபோன்ற அமைப்பினை ஒரு சில ஆலயங்களின் மதில் சுவர்களிலும், கிராமங்களில் உள்ள ஒரு சில இல்லங்களில் மட்டுமே காண முடிகிறது.

இந்த வெள்ளைச் சுண்ணாம்பு என்பது ஆன்டி பாக்டீரியாவாக செயல்பட்டு, அந்த இல்லத்திற்குள் எந்த விதமான நோய்கிருமியும் வராமல் தடுக்கிறது. அதே போல, காவி என்கிற அந்த மண் ஆனது பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் அருகில் வராமல் பாதுகாக்கிறது. வீட்டு வாசலில் கோலம் போடும்போது இந்த காவி மண்ணை பார்டர் போல போடுவார்கள். அந்த காவி மண்ணிற்கு அருகில் விஷ ஜந்துக்கள் ஏதும் அண்டாது என்ற உண்மையை நம் முன்னோர்கள் புரிந்து வைத்திருந்தார்கள்.

இந்த நவீன யுகத்தினைப் பொறுத்தவரை வீடுகளுக்கு நாம் பெயிண்ட் அடிக்கும்போது வெளிப்புறத் தோற்றத்திற்கு பச்சை, மஞ்சள், பார்டரில் சிவப்பு போன்ற மங்களகரமான வர்ணங்களைப் பயன்படுத்தலாம். அலுவலகம், வியாபாரத் தலங்களில் சிவப்பு, ஆரஞ்சு போன்ற நிறங்களையும், ஃபேக்டரி, மெஷினரீஸ் இயந்திரங்கள் செயல்படும் இடங்களில் நீலம், ஊதா, இண்டிகோ போன்ற வர்ணங்களை உபயோகிக்கலாம். குடியிருக்கும் வீட்டினைப் பொறுத்த வரை வெள்ளைச் சுண்ணாம்பு என்பது எக்காலத்திலும் நன்மை தரும்.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

ஏன் எதற்கு எப்படி…?

தினகரன்,ராசி பலன்கள்
தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை – 600 004.

The post ஏன் எதற்கு எப்படி?: வாஸ்து முறைப்படி வீட்டில் வண்ணம் அடிக்க சிறந்த நிறங்கள் எவை? appeared first on Dinakaran.

Tags : Diwali ,Manikandan ,Tiruvallur ,
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...