×

வெங்கச்சேரி செய்யாற்றில் கடும் வெள்ள பெருக்கு சேதமடைந்த தரைபாலத்தில் ஆபத்தை உணராமல் செல்லும் மக்கள்: விரைந்து சீரமைக்க கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூர் செல்லும் சாலை மாகரல் – வெங்கச்சேரி பகுதியில் அமைந்துள்ள செய்யாற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ள பெருக்கில், சேதமடைந்துள்ள தரைப்பாலத்தில் ஆபத்தை உணராமல் வாகனங்கள் கடந்து செல்கின்றன. உடனடியாக தரைப்பாலத்தை பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த மாகரல் – வெங்கச்சேரி இடையே செய்யாறு குறுக்கிடும் இடத்தில் காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் ஒன்றியங்களை இணைக்கும் உயர்மட்ட தரைப் பாலம் உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு  பெய்த கனமழையில் இந்த பாலம் கடும் சேதமடைந்தது. இதனால், உத்திரமேரூர் – காஞ்சிபுரம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.இதையடுத்து  தற்காலிகமாக தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து மீண்டும் துவங்கியது. அப்போது, வெங்கச்சேரி செய்யாற்றின் குறுக்கே புதிதாக உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதைதொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு  உயர்மட்ட பாலம் அமைக்க பணிகள் துவங்கப்பட்டது. ஆனால், அந்த பணியும் கிடப்பில் போடப்பட்டது. இதனால், மழை காலங்களில், செய்யாற்றில் வெள்ளம் ஏற்படும்போது, உத்திரமேரூர் – காஞ்சிபுரம்  இடையே போக்குவரத்து துண்டிக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது. இதற்கிடையில், உத்திரமேரூரை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கிடப்பில் போடப்பட்ட வெங்கச்சேரி செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழையால், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் சுமார் 15ஆயிரம்  கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால் செய்யாற்றில் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு  வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக வெங்கச்சேரி செய்யாற்றின் குறுக்கே ரூ.8 கோடியில் கட்டப்பட்டுள்ள தடப்பனை முழுவதும் நிரம்பி வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது.செய்யாற்றில் மேலும் கூடுதலாக நீர் மட்டம் உயர்ந்தால் வெங்கச்சேரி செய்யாறு  தரைப்பாலம் முழுவதுமாக அடித்து செல்லும் நிலை உள்ளதாக கருதப்படுகிறது. இதனால் காஞ்சிபுரம் மற்றும் உத்தரமேரூர் ஒன்றியங்கள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு  சுமார் 150க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.ஏற்கனவே வெங்கச்சேரி தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு இருந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சவுக்கு கொம்புகள்  மற்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை கொண்டு   பாலம்  பலப்படுத்தப்பட்டது. ஆனால் தொடர் வெள்ள பெருக்கால், பலப்படுத்தப்பட்ட பகுதி மீண்டும் சேதமடைந்துள்ளது. இதுபோன்று, சேதமடைந்துள்ள தரைபாலத்தை ஆபத்தான நிலையில் வாகனங்களும், மக்களும் கடந்து செல்கின்றனர். எனவே, சேதமடைந்த பாலத்தை பலப்படுத்தி , வடக் கிழக்கு பருவ மழை முடிந்த பிறகாவது வெங்கச்சேரி செய்யாற்றில் புதிதாக உயர்மட்ட பாலத்தை விரைந்து கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post வெங்கச்சேரி செய்யாற்றில் கடும் வெள்ள பெருக்கு சேதமடைந்த தரைபாலத்தில் ஆபத்தை உணராமல் செல்லும் மக்கள்: விரைந்து சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Venkacherry ,Kanchipuram ,Uthramerur ,Magaral ,Venkachery ,Dinakaran ,
× RELATED நவீன விவசாய ஆலோசனை கூட்டம்