×

படைவீரர் கொடிநாள் தினம்

தஞ்சாவூர், டிச.8: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் படைவீரர்கள் கொடிநாள் தினத்தை கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடிநாள் நிதி வழங்கி தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் படைவீரர் கொடிநாள் தேநீர் விருந்து கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வந்த அனைவரையும் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் மேஜர் சரவணன் (ஓய்வு) வரவேற்று முன்னாள் படைவீரர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள், பயிற்சிகள் போன்ற விபரங்களை எடுத்துரைத்தார். மேலும், கடந்த ஓராண்டில் முன்னாள் படைவீரர், சார்ந்தோர்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசால் 502 நபர்களுக்கு ரூ.1,42,00,938 நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

விழாவில் தஞ்சாவூர் கலெக்டர் தீபக் ஜேக்கப், முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.10,03,615 மதிப்பிலான, கல்வி உதவித் தொகை, திருமண நிதியுதவி, கண்கண்ணாடி மானியம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் 61 நபர்களுக்கு வழங்கினார்.

2022 கொடிநாள் ஆண்டில் அரசு இலக்கு ரூ.1,67,60,000 அதில் ரூ.1,89,55,184 வசூல் செய்யப்பட்டுள்ளது. இது 113.09% சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு வசூல் தொகையினை விட இந்த ஆண்டு கூடுதலாக வசூல் செய்திட மாவட்ட அலுவலர்களை கேட்டுக்கொண்டதுடன், பொது மக்கள் அதிக அளவில் கொடிநாள் நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். முன்னதாக கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் படைவீரர் கொடிநாளை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் நேற்று கொடி நாள் நிதி வழங்கி தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் மாவட்ட முப்படைவீரர் வாரிய தலைவர் மேஜர் பாலகிருஷ்ணன், முன்னாள் படைவீரர் நலத்துறை கண்காணிப்பாளர் சுகுமாரன், முப்படை அதிகாரிகள், கொடிநாள் வசூல் செய்த மாவட்ட அலுவலர்கள், முன்னாள் படைவீரர், சார்ந்தோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post படைவீரர் கொடிநாள் தினம் appeared first on Dinakaran.

Tags : Veterans Flag Day ,Thanjavur ,Collector ,Deepakjaek ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...