×

அரியமான் பீச்சில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்: சுற்றுலா பயணிகள் கோரிக்கை

 

மண்டபம், டிச. 8: மண்டபம் அருகேயுள்ள அரியமான் பீச்சில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் ஒன்றியம் சாத்தக்கோன் வலசை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ளது அரியமான் பீச். இந்த பீச் வனச்சரகம் பகுதியில் ஏறத்தாழ 2 கிலோ மீட்டர் தொலை தூரத்திற்கு நீண்ட நிலப்பரப்பில் அழகான தோற்றத்தில் கடல் அமைப்புடன் அமைந்துள்ளது.

இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வார விடுமுறை நாட்களாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். இங்கு வரும் சுற்றுலா பயணிகல் உணவு, தேநீர், தின்பண்டங்களை இந்த கடலோர பகுதியில் அமர்ந்து சாப்பிட அதிகம் விரும்புவர். இங்கு இளநீர் கடைகள், கூல்ரிங்க்ஸ் கடை, சிறிய உணவு கடை மற்றும் மீன் பொறியல் கடைகள் என 50க்கு மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள், கூரை ஷெட்டுகள் உள்ளன.

கடலோர பகுதி என்பதால் திடீரென மழை மற்றும் அதிக காற்று வீசும் போது வியாபாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகளும் ஒதுங்க இடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே இங்கு வணிக வளாகம் கட்டவும், கூடுதல் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அரியமான் பீச்சில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்: சுற்றுலா பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ariyaman Beach ,Mandapam ,Dinakaran ,
× RELATED தேங்கி கிடக்கும் பாலித்தீன் குப்பைகள் அழகை இழந்து வரும் அரியமான் கடற்கரை