×

வெஸ்ட் இண்டீசுக்கு இங்கிலாந்து பதிலடி: சம நிலையில் ஒருநாள் தொடர்

நார்த் சவுண்ட்: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி முதலில் 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஆண்டிகுவாவின் நார்த் சவுண்ட் நகரில் நடந்த முதல் ஒருநாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 4விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. எனவே தொடரில் வெ.இ 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் 2வது ஒருநாள் ஆட்டம் அதே நார்த் சவுண்ட் நகரில் நேற்று காலை முடிந்தது.

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து எதிர்பார்த்தது போலவே முதலில் பேட்டிங் செய்த வெ.இ ரன் குவிக்க தடுமாறியது. கூடவே விக்கெட்களையும் அடுத்தடுத்து பறிகொடுத்தது. பொறுப்பு உணர்ந்து விளையாடிய கேப்டன் ஷாய் ஹோப், ஷெர்ஃபன் ரூதர்ஃபோர்டு ஆகியோர் 5வது விக்கெட்டுக்கு 129ரன் குவித்தனர். அரைசதம் விளாசிய இருவரும் முறையே 68, 63ரன்களில் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் வெளியேற வெ.இ 39.4ஓவரில் 202ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் சாம் கரன், லியம் லிவிங்ஸ்டோன் தலா 3, கஸ் அட்கின்சன், ரெஹன் அகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அதனையடுத்து எளிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து வேகமாக ரன் குவிக்க ஆரம்பித்தது. ஆனால் பில் சால்ட் 21, ஜாக் கிரெவ்லி, பென் டக்கெட் தலா 3ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க மற்றவர்கள் நிதானத்துடன் விளையாடினர்.

அரை சதம் விளாசிய வில் ஜாக் 73ரன் குவித்து வெளியேறினார். தொடர்ந்து இணை சேர்ந்த ஹாரி புரூக் 43, கேப்டன் ஜோஸ் பட்லர் 58ரன் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இலக்கை எட்டினர். அதனால் இங்கிலாந்து 32.5ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 206ரன் எடுத்து 6விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற்து. வெ.இ தரப்பில் குடகேஷ் மோதி 2விக்கெட் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்களை கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்த 2 அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் ஆட்டம் நாளை பார்படாசின் பிரிட்ஜ்டவுன் நகரில் நடைபெற உள்ளது.

The post வெஸ்ட் இண்டீசுக்கு இங்கிலாந்து பதிலடி: சம நிலையில் ஒருநாள் தொடர் appeared first on Dinakaran.

Tags : England ,West Indies ,West ,Indies ,
× RELATED ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக...