×

களத்தில் கம்பீர் அசிங்கமாக திட்டினார்: ஸ்ரீசாந்த் வேதனை வீடியோ

சூரத்: லெஜண்ட் கிரிக்கெட் லீக் என்ற பெயரில் முன்னாள் வீரர்கள் விளையாடும் டி20கிரிக்கெட் போட்டியின் 2வது தொடர் நடக்கிறது. இதில் இந்தியா கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக பாஜக எம்பியும், முன்னாள் வீரருமான கவுதம் கம்பீர்(42) உள்ளார். அதேபோல் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் பந்து வீச்சாளராக முன்னாள் வீரர் எஸ்.சாந்த்(40) இடம் பெற்றுள்ளார். சாந்த் 2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி காவல்துறை குற்றம் சாட்டியது. அந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அதனால் சாந்த் கிரிக்கெட் வர்ணனையாளராகவும், இதுப்போன்ற உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் லெஜண்ட் லீக் தொடரின் எலிமினேட்டர் சுற்று ஆட்டம் நேற்று முன்தினம் சூரத்தில் நடந்தது. அதில் இந்தியா கேபிடல்ஸ் அணி 12ரன் வித்தியாசத்தில் குஜராத்தை ஜெயன்ட்சை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தின் போது கம்பீர்-சாந்த் இடையே வாக்குவாதம் நடந்தது. இந்நிலையில் கம்பீர் தன்னை கெட்ட வார்த்தைகளில் திட்டியதாகவும், முரட்டுதனமாக நடத்தியதாகவும் சாந்த் ஒரு வேதனை வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘‘கம்பீர் அடிக்கடி என்னை ஃபிக்சர்(சூதாட்டக்காரர்)…. ஃபிக்சர்’ என்று அழைத்தார். முதலில் நான் அதை கவனிக்கவில்லை. ஆனால் அதை அவர் நிறுத்தவேயில்லை.

கூடவே நீங்கள் ஒரு ‘எப்–கே ஆஃப் ஃபிக்சர்’ , என்று ஆங்கில கெட்ட வார்த்தையை சொல்லி திட்டினார். நடுவர்கள் அவரை கட்டுப்படுத்த முயன்றும் அவர் அப்படிச் சொல்வதை நிறுத்தவில்லை. ஆனால் அவரை பார்த்து நான் எந்த ஒரு தரக்குறைவான அல்லது கெட்ட வார்த்தையை பயன்படுத்தவில்லை. ‘என்ன சொல்கிறீர்கள்’ என்று கேட்டுக் கொண்டே கிண்டலாக சிரித்தேன். சொல்ல முடியாத விஷயங்களை அவர் பேசினார். அவரது தகுதிக்கு அப்படி பேசியதை ஏற்கமுடியாது. என் குடும்பம், என் மாநிலம் என எல்லோரும் எத்தனையோ கஷ்டங்களை சந்தித்துள்ளனர். எந்த காரணமும் இல்லாமல் என்னை வீழ்த்த நினைக்கிறார்கள். அவர் பேசிய அனைத்தையும் நிச்சயமாக உங்களுக்கு சொல்வேன்’’ என்று கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு சாந்த் மீது அவரது நண்பர்கள், கேரள போலீசில் பணமோசடி புகார் அளித்துள்ளனர்.

The post களத்தில் கம்பீர் அசிங்கமாக திட்டினார்: ஸ்ரீசாந்த் வேதனை வீடியோ appeared first on Dinakaran.

Tags : Gambhir ,Sreesanth ,Surat ,T20 cricket ,Legend Cricket League ,Dinakaran ,
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...