×

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மு.க.ஸ்டாலினுடன் ராஜ்நாத் ஆலோசனை: வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்

சென்னை: ‘மிக்ஜாம்’ புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில், ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். பின்னர் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். அப்போது, வெள்ள பாதிப்புகளை சீர் செய்திட தேவையான நிதியை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை வைத்தார். ‘மிக்ஜாம்’ புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் வரலாறு காணாத மழையை சந்தித்தன. புயல் மற்றும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், 4 மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்புகள் அதிகம் இல்லாவிட்டாலும், சாலை உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. பல லட்சம் கார்கள், டூவீலர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள், கடைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. புயல், வெள்ள பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு தற்போது தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொது கட்டிடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. மேலும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி உடனடியாக வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதியுள்ளார். பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தை தொடர்ந்து ஒன்றிய அரசு சார்பில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெள்ள பாதிப்புகளை பார்வையிட நேற்று (7ம் தேதி) சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று காலை 9.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு பகல் 12.15 மணிக்கு சென்னை வந்தார். ஒன்றிய அமைச்சருடன், ஒன்றிய மீன்வளம், கால்நடை, பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய செயலாளர் கமல் கிஷோர் ஆகியோரும் வந்தனர்.

பின்னர் விமான நிலையத்தில் இருந்து அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலம் மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடன் சென்று, மழை வெள்ள சேதங்கள் குறித்தும், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்தனர். அவர்கள் சுமார் 40 நிமிடங்கள் வெள்ள சேதங்களை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒன்றிய, மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், வங்கக்கடலில் உருவான புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள், மழை, வெள்ள காலங்களில் மின் கசிவால் ஏற்படும் விபத்துகளை தடுக்க மின்சார வாரியத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சை பிரிவு செயல்பட்டது, பாதிப்பிற்குள்ளாகும் மக்களுக்கு உணவு வழங்கிட உணவு தயாரிக்கும் சமையல் கூடங்கள், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத வகையில், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் 32 செ.மீ. மழை, சென்னை பெருங்குடியில் 29 செ.மீட்டரும் பதிவாகியுள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான நிவாரணம் வழங்கப்பட்டு வருவதுடன், சீரமைப்பு பணிகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

பாதிப்புகள் மற்றும் தேவையான நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை தீவிரப்படுத்த மாநிலத்தின் 20 அமைச்சர்களையும், 50க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளையும், ஐபிஎஸ் அதிகாரிகளையும் நியமித்து, அனைவரும் களத்தில் பணியாற்றி வரும் விவரங்களும் எடுத்துரைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்து, தேவையான உணவு, குடிநீர், மருந்து, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருவதையும், மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய நோய் தொற்றில் இருநது பாதுகாக்க மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதும் தெரிவிக்கப்பட்டது.

தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மற்றும் அரசு துறைகளுடன் இணைந்து துரிதமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவது குறித்தும் விளக்கப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள், பொது கட்டிடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளது குறித்தும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சிறு வியாபாரிகள் மற்றும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது குறித்து தெரிவித்து, புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசின் கோரிக்கையான இடைக்கால நிவாரண தொகையை விரைவில் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இந்த கூட்டத்தின்போது, தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை தெரிவித்து, இடைக்கால நிதியுதவி கோரும் மனுவினை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்தார். ஆலோசனை கூட்டத்திற்கு பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புகளை ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்துள்ளார். இதற்கு தமிழ்நாடு அரசின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். சென்னையின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெய்த பெருமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீண்டு, சென்னை நகரமும், மக்களும் இயல்பு நிலைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.  இந்த பெரும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் அனைவரும் இணைந்து களப்பணி ஆற்றி வருகின்றோம். தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இத்தகைய பெருமழையிலும், உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள் போன்ற பொது கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்வதற்கும், நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் ஏதுவாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5,060 கோடி வழங்கிடுமாறு பிரதமருக்கு ஏற்கனவே நான் கோரிக்கை விடுத்திருந்தேன்.

நமது கோரிக்கைகள் குறித்த மனு ஒன்றினையும் ஒன்றிய அமைச்சரிடம் அளித்துள்ளேன். இழப்பீடுகளை மதிப்பீடு செய்திட ஒன்றிய அரசின் குழு ஒன்றும் விரைவில் தமிழ்நாடு வர உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த கோரிக்கைகளை பரிசீலித்து, உரிய நிதி உதவியை ஒன்றிய அரசு விரைவில் வழங்கிடும் என ஒன்றிய அமைச்சர் உறுதியளித்துள்ளார். நிவாரண பணிகளை முழுவீச்சில் தொடர்ந்து மேற்கொண்டு, அனைத்து பகுதிகளையும் இயல்பு நிலைக்கு விரைவில் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய செயலாளர் கமல் கிஷோர், அரசு துறை செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், கடற்படை உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* இயல்பு நிலைக்கு திரும்ப மத்திய அரசு உதவும்: ராஜ்நாத் சிங்
சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்திய பிறகு ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டி: நான் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். தொடர்ந்து முதல்வரை சந்தித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். இந்திய ராணுவம், இந்திய கடற்படை, இந்திய விமானப்படை, இந்திய கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் பிற மத்திய அமைப்புகள் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் மாநில அரசுக்கு உதவுவதோடு, இயல்பு நிலைக்கு திரும்ப அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

புயல், மழையால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த துயரத்தில் இருப்பதுடன், அவர் நிலைமையை உன்னிப்பாக ஆய்வு செய்து வருகிறார். தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை பிரதமர் சார்பாக உறுதி அளிக்கிறேன். தமிழ்நாடு மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு 2ம் தவணையாக ரூ.450 கோடியை வழங்க உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

நகர்ப்புற வெள்ள பிரச்னையை சென்னை சமீப வருடங்களில் அடிக்கடி சந்தித்து வருவதால், நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்காக ஒன்றிய அரசு ரூ.561.29 கோடி நிதியுதவி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ஒன்றிய அரசு உதவியாக ரூ.500 கோடி வழங்கும். மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று மாலை 3 மணிக்கு சென்னை, விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றார்.

* முதல்வரிடம் பிரதமர் உறுதி
சென்னை புயல், மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நேற்று பிரதமர் மோடி தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். அப்போது புயல் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட ஒன்றிய அரசின் பல்துறை குழுவை உடனே அனுப்பி வைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்ைக வைத்தார். இதற்கு பதில் அளித்த பிரதமர், ‘தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்’ என்று உறுதி அளித்தார்.

The post மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மு.க.ஸ்டாலினுடன் ராஜ்நாத் ஆலோசனை: வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார் appeared first on Dinakaran.

Tags : Mikjam ,M.D. K. Rajnath ,Stalin ,Chennai ,Union Defence Minister ,Rajnath Singh ,Mijam K. Rajnath ,
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்