×

உலக தரவரிசைப் பட்டியலில் ரசமலாய் 31வது இடம் காஜூகத்லி 41வது இடம்

நன்றி குங்குமம் தோழி

உலகளவில் இருக்கும் சிறந்த உணவுகளின் அனுபவங்களைக் கண்டறியும் ஆன்லைன் வழிகாட்டியான பிரபல டேஸ்ட்அட்லாஸ் அமைப்பு, பல்வேறு உணவுகளின் தரம், சுவை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு தரவரிசைப் பட்டியலோடு, அதனை தங்களின் அதிகாரப்பூர்வ இணைய பக்கங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

இந்த முறை மேற்கொண்ட தங்களின் ஆய்வில் இந்தியா உட்பட உலகின் 50 சிறந்த இனிப்புகளின் பட்டியலை ஆராய்ந்து இதன் தரவரிசைப் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது. இதில் இந்தியாவின் பிரபல இனிப்புகளான ரசமலாய் 31வது இடத்திலும், காஜூகத்லி 41வது இடத்திலும் இடம் பெற்றுள்ளது.முதல் மூன்று இடங்களை பிரான்சில் இருந்து தயாராகும் க்ரீப்ஸ், பிரேசிலியன் தயாரிப்பான பாம் பகோடா (தேங்காய் சுவை கொண்ட பேஸ்ட்ரி), பெருவின் கியூசோ ஹெலடோ (ஐஸ்கிரீம் போன்றது) மற்றும் இத்தாலிய டிராமிசு இனிப்புகள் இடம் பிடித்துள்ளன.

மேற்கு வங்காளத்தில் பெங்காளிகளின் ஸ்வீட்டாக தயாராகும் அனைவரும் அறிந்த ரசமலாய் இந்தியர்களின் பிரியமான மற்றும் பிரபலமான இனிப்பாக தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகைகளில் பரிமாறப்படுகிறது. வொயிட் க்ரீம், சர்க்கரை, பால் மற்றும் ஏலக்காய் சுவை கொண்ட பனீர் சீஸ் இணைத்து இது தயாராவதுடன் பாதாம், முந்திரி,
குங்குமப்பூ போன்றவை கூடுதல் சுவைக்காக ரசமலாயில் சேர்க்கப்படுகிறது.

பண்டிகை காலங்கள் மட்டுமல்லாது மற்ற நாட்களிலும் அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய இனிப்புகளில் ஒன்றான காஜூகத்லி ஸ்வீட் வட இந்தியர்களின் கண்டுபிடிப்பு. இது முந்திரி, சர்க்கரை, ஏலக்காய் பவுடர் நெய் மற்றும் வெண்ணெய் இணைத்து தயாராகிறது.

வைர வெட்டின் வடிவத்தில் வெள்ளி நிற ஃபாயில் பேப்பர் மெல்லிய படலமாக இந்த இனிப்பின் மேல் மினுமினுவெனத் தோற்றம் அளிக்கும்.பல்வேறு ஸ்வீட்களின் அணிவகுப்பிற்கு நடுவே தனித்தே காட்சி தரும் இந்த வகை காஜூகத்லி வகை ஸ்வீட்கள், ஆடம்பரப் பிரியர்களின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.காஜூகத்லி ஸ்வீட்டை உண்பது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருவதாக இந்தியாவில் வசிக்கும் ஒரு பிரிவு மக்கள் நம்புகிறார்கள்.

தொகுப்பு: மணிமகள்

The post உலக தரவரிசைப் பட்டியலில் ரசமலாய் 31வது இடம் காஜூகத்லி 41வது இடம் appeared first on Dinakaran.

Tags : Khajukatli ,Kumkum Doshi ,Rasamalai ,Dinakaran ,
× RELATED கோடையில் எடை இழப்புக்கு உதவும் சப்போட்டா!