×

வண்ணங்களும் எண்ணங்களும்

வண்ணங்கள் எப்பொழுதும் நமக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும். அதுமட்டுமின்றி ஒரு ஈர்ப்பையும் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஒவ்வொருவரின் தனிப்பட்ட மனிதருக்கும் ஒவ்வொரு வண்ணம் எப்பொழுதும் பிடித்துப் போனதாக இருக்கும். அப்படி பிடித்துப் போன வண்ணங்கள் அவர்களை அறியாமலேயே அவர்களை வழிநடத்திக் கொண்டே இருக்கும். அப்படி வண்ணங்கள் என்ன செய்கின்றன? எப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்கின்றன? என விஸ்தரிக்கலாம்.

வண்ணங்கள் மூலம் நோய்களை குணப்படுத்தும் சிகிச்சையும் உண்டு. அதற்கு `குரோமோ தெரபி’ (chromotherapy) என்று பெயர். சூரியனிலிருந்து வெளிப்படும் வெண்மை நிறம், அறிவியலின் ஆராய்ச்சியில் ஏழு வண்ணங்களின் கூட்டுக் கலவை என்பதை நாம் அறிவோம். இந்த கூட்டுக் கலவையே பிரபஞ்சத்தை இயங்க வைக்கிறது என்றால் அது மிகையில்லை.

மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலும் குளிர் பிரதேசங்களாக உள்ளன. அங்குள்ளவர்களுக்கு அதிகமாக வெப்பத்தை உள்வாங்கிக் கொள்ளும் வாய்ப்புகள் அமைவதில்லை. இயற்கையாகவே அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களாக உள்ளனர். அக்காரணத்தினால்தான், அவர்கள் ஆய்ந்தறிந்து சூரிய குளியல் என்ற முறையை அறிந்து, கடற்கரைகளில் தங்களின் உடல் மீது சூரியனின் கதிர்களை ஈர்க்கும் படியாக இளைப்பாறுகின்றனர்.

எவ்வளவுதான் மருத்துவம் வளர்ந்தாலும் பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இயற்கையாக சிகிச்சை பெறுவதும் அதற்கான இயற்கையாக ஆற்றலை பெற்றுக் கொள்வதும்தான் பக்க விளைவுகள் இல்லாத சிறந்த சிகிச்சை. நமது உடலானது ஸ்தூல சரீரம், சூட்சும சரீரம் என இருவகையாக உள்ளது. ஸ்தூல சரீரம் பாதிக்கப்படும் பொழுது சூட்சும் சரீரமும் கொஞ்சம் பாதிப்பு ஏற்படும். அதேபோல, சூட்சும சரீரம் பாதிக்கப்படும் பொழுது, ஸ்தூல சரீரமும் பாதிப்பு ஏற்படுகின்றது. இந்த சூட்சும சரீரம் என்பது பிரபஞ்ச ஆற்றலை உடனடியாக கிரகித்து கொள்ளக் கூடிய தன்மையில் உள்ளது.

ஸ்தூல சரீரம் பிரபஞ்ச ஆற்றலை மெதுவாக கிரகித்து கொள்ளக்கூடிய தன்மையில் உள்ளது. இந்த ஆற்றலைதான் நாம் அதிர்வலைகள் (Vibe – Vibration) என்கிறோம். சந்தோஷமான மனநிலையில் இருப்பவர்கள் ஒருவிதமான அதிர்வலைகள் கொண்ட ஆற்றலையும், துக்கமான மனநிலையில் இருப்பவர்கள் மற்றொருவிதமான அதிர்வலைகள் கொண்ட ஆற்றலையும் கொண்டிருக்கிறார்கள் என்பதை நமது அன்றாட வாழ்வில் உணர்கிறோம்.

வண்ண சிகிச்சைகளைப் பற்றிய ஆய்வு செய்யும் பொழுது, `குரோமோ தெரபியும்’, `ஜெம் தெரபியும்’ மற்றும் `டெலி தெரபியும்’ நெருக்கமான தொடர்புடைய சிகிச்சைகளாக உள்ளன. குரோமோ தெரபியில் வண்ணங்களுக்கான ஒளிகளை நம்மீது பாய்ச்சப்பட்டு நம் உடல் அந்த வண்ணத்தை ஈர்க்கப்படுவதாக உள்ளது. ஆனால், டெலி தெரபியில், ரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஒரு டிஸ்க் ஒளி பிரதிபலிக்கப்பட்டு சுழலச் செய்யப்படுகிறது. அவ்வாறு பிரதிபலிக்கப்படும் வண்ணங்கள் நம்மீது பட்டு உடலில் உள்ள குறைபாடுகளை சீர்செய்கிறது. ஜெம் தெரபியில் அப்படி வண்ணக் கதிர்கள் விரைவுபடுத்தப்படுவதில்லை.

ஆதலால் ஆற்றல் குறைவாக உண்டு. ஜெம் தெரபியில் நாம் நேரடியாக வண்ணங்களுடனோ ரத்தினங்களுடனோ தொடர்பு கொள்கிறோம். டெலிதெரபியில் நோயுற்றவர்களின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு அவர்கள் சிகிச்சை முறையினை செய்கிறார்கள். வட இந்தியாவில் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையும் இந்த வண்ணத்தை அடிப்படையாகக் கொண்டே கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையானது வெற்றியையும் அன்பையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. அன்பும் சந்தோஷமும் நிறைந்திருப்பதே பிரபஞ்சத்தின் நித்திய தேவை.

தொகுப்பு: சிவகணேசன்

The post வண்ணங்களும் எண்ணங்களும் appeared first on Dinakaran.

Tags :
× RELATED அறிவா? உணர்ச்சியா? எது தீர்மானிக்கிறது?