×

நல்வாழ்வு தரும் நவரத்தினங்கள்

மாணிக்கம்

ரத்தினங்களில் நவ ரத்தினங்கள் என்றும் உப ரத்தினங்கள் என்றும் உண்டு. ஒன்பது கிரகங்களுக்கு உரியவை நவரத்தினங்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு ரத்தினம் உள்ளது. சூரியனுக்கு மாணிக்கம், சந்திரனுக்கு முத்து, செவ்வாய்க்கு பவளம், புதனுக்கு மரகதம், குருவுக்கு புஷ்பராகம், சுக்கிரனுக்கு வைரம், கேதுக்கு வைடூரியம், ராகுக்கு கோமேதகம், சனிக்கு நீலக்கல். இவை கிரகத்தின் பலம் பெறுவதற்காக அதனுடைய அதீத சக்தியை நாம் பெறுவதற்காக அணியப்படுகின்றன.

சூரியனும் ரத்தினமும்

ஒருவர் ஜாதகத்தில் சூரியன் நீசமாக இருந்தாலும் அல்லது பாவ கிரகங்கள் சம்பந்தப்பட்டிருந்தாலும் அல்லது சூரியன் நின்ற இருந்த ராசிநாதன் நீசமாகவோ பாவ கிரகங்கள் சம்பந்தப்பட்டோ பலம் இன்றியோ இருந்தாலும் நாம் சூரியனின் பலனை மிகுதியாக பெற மாணிக்கத்தை வாங்கி அணிய வேண்டும். கிரகங்களுக்குரிய ரத்தினத்தை வாங்கி அணிவது முன்னேற்றமான பலனைத் தரும்.

புராணங்கள் சூரியனுக்கு உரிய கிரகமான நவரத்தினமான மாணிக்கம் என்பதை சிந்தாமணி கல் என்கிறது. சிந்தாமணி கல்லுக்கு என்று ஒரு தனி வரலாறும் புராணக் கதையும் உண்டு. சூரியனுக்குரிய சிந்தாமணி கல்லை ஸ்ரீமத் பாகவதம் ஒரு நீண்ட வரலாறாக எடுத்துக் கூறுகின்றது. சத்ரஜித் என்ற மன்னன் சூரியன் அருளால் `ஷியமந்த நகை’ என்ற பெயரில் ஒரு சிந்தாமணி கல்லை அணிந்திருந்தான். சிந்தாமணி என்பது சிந்தையில் தோன்றும் ஆசைகளை எல்லாம் நிறைவேற்றும் மணி ஆகும்.

இவன் சிந்தாமணி கல்லை கழுத்தில் அணிந்தபடி துவாரகைக்குச் சென்றான். அங்கு அவனுக்குப் பொன்னும் பொருளும் குவிந்தது. அவனுடைய நாடும் மக்களும் சீரும் செழிப்பாக வாழ்ந்தனர். ஆனாலும் அவன் பேராசையின் காரணமாக விஷ்ணுவைப் பகைத்துக் கொண்டான். ஆயினும் இவனுடைய மகள் சத்யபாமாவை கிருஷ்ணர் மணந்து சுப வாழ்வு வாழ்ந்தார்.

இந்து சமயத்தில் விஷ்ணு, `பிரகத் பாகவதாமிர்தம்’ என்ற புராணம் சிந்தாமணி விஷ்ணுவிடம் இருப்பதாக தெரிவிக்கின்றது. விஷ்ணுவிடம் இருக்கும் சிந்தாமணி கல்லுக்கு பெயர் `கௌஸ்துபத்துப மணி’. இதன் இன்னொரு பெயர் நாகமணி. சிந்தாமணி சொர்க்கத்தை அடைய விஷ்ணு பக்தர்கள் மிகக் கடினமாக தவம் இருந்து விரதம் இருந்து பக்தி மார்க்கத்தில் நின்று முயற்சி செய்வார்கள்.

ஆனால் சிந்தாமணி கல் மட்டும் கையில் இருந்தால் விஷ்ணுவின் வைகுண்டத்தை எளிதில் சென்று அடையலாம். பலவகையிலும் பெருமை பெற்ற சிந்தாமணி கல்லை பௌத்த சமயமும் விட்டு வைக்கவில்லை. பௌத்த சமயம், சிந்தாமணி கல்லை ‘பல மணி ஜுவல்’ என்று அழைத்தது. இம்மதம் மரகதத்தை சிந்தாமணி கல் என்று அழைத்ததாகவும் அறிகின்றோம். சிந்தாமணி கல் பாற்கடலில் பிறந்தது என்றும், இந்திரனிடம் மட்டுமே இருந்தது என்றும் புராணக்கதை குறிப்பிட்டுள்ளது.

பொதுவாக, ஒருவர் வீட்டை விட்டு வெளியே செல்லும் முன்பு பெரியவர்களை கால்களைத் தொட்டு நமஸ்கரிக்க வேண்டும் அல்லது பூக்கள், நெய், மலர், ரத்தினம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையோ, பலவற்றையோ தொட்டு வணங்கி வெளியில் செல்வதே நன்மை பயக்கும். சூரியனுக்கு உகந்த கல்லாக மாணிக்க கல்லை கையில் கொண்டு சென்றாலோ தொட்டு வணங்கி சென்றாலோ நினைத்தது நிறைவேறும்.

மாணிக்கம், நவரத்தினங்களில் சிறந்ததாகும். சூரியனுடைய மாணிக்கக்கல் பற்றி இன்னொரு சம்பவத்தையும் எடுத்துக் கூறலாம். பாண்டியனுடைய அவையில் கண்ணகி வழக்குரைத்த போது அவளுடைய வழக்குக்குச் சாட்சியாக இருந்தது அவளது சிலம்பில் இருந்த மாணிக்க பரல்களாகும். அவள் அதனை எடுத்துக் கூறிய போது பாண்டியன் திகைத்துப் போனான். அவனுடைய பாண்டிமா தேவியின் கால் சிலம்புகளில் இருந்தவை முத்து பரல்கள் ஆகும்.

தான் அவசரப்பட்டு கோவலனைக் கொன்று விட்டதாக அவன் உணர்வதற்கு சாட்சியாக அமைந்தவை மாணிக்க பரல்கள். கண்ணகி சோழ நாட்டைச் சேர்ந்தவள். சோழன் சூரிய வம்சத்தை சேர்ந்தவன். சூரிய வம்சத்தை சேர்ந்தவனின் நாட்டில் வாழ்ந்த செல்வ குடிப் பெண், மாணிக்கப் பரல்கள் நிறைந்த சிலம்பை அணிந்திருந்ததில் வியப்பு ஒன்றுமில்லை. இங்கு சூரியனுக்கும் மாணிக்கத்துக்கும் உள்ள தொடர்பை சோழ வம்சத்தோடும் நாம் பொருத்திப் பார்க்கலாம்.

பொதுவாக சூரியனிடமிருந்து நன்மைகளைப் பெறுவதற்கு நாம் செம்பு கலசத்தில் குங்குமத்தை கரைத்து சூரியனுக்கு வைத்து வணங்க வேண்டும். இங்கு கரைக்கப்படும் குங்குமத்துக்குப் பதிலாக மாணிக்கத்தை தண்ணீருக்குள் வைத்தும் வணங்கலாம். சூரிய நமஸ்காரம் தினமும் செய்யலாம். ஆதித்த ஹிருதய ஸ்லோகம் சொல்லலாம்.

“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லிம் கமலாதரணி ஆதித்த வர்ணாயை நம:’’ என்ற ஸ்லோகத்தை 108 முறை சொல்லலாம். அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பு வரும் சிவந்த சூரியனை அருணோதயத்தில் நம்முடைய கண்களால் நேரில் கண்டு வணங்கலாம். அவ்வேளையில் ராமனை மனதில் எண்ணி துதிப்பது மேலும் நல்ல பலனை தரும்.

சூரியனுக்குரிய மாணிக்க கல்லை அணிந்தவர்கள், உஷ்ண நோய் தணியும். பொதுவாக சூரியன் ராசியில் பிறந்தவர்கள் மேஷ ராசி, மேஷ லக்னம், சிம்ம ராசி, சிம்ம லக்கனம் போன்றவற்றில் பிறந்தவர்களுக்கு உடல் அதிக உஷ்ணமாக இருக்கும். அவர்களுடைய உஷ்ணம் தணிவதற்கு மாணிக்க கல்லை அணிவது உதவியாக இருக்கும். ரத்த சோகை உள்ளவர்கள் ரத்தவிருத்திக்கு மாணிக்க கல் அணியலாம். இதற்கு சிவப்பு நிறம் கொண்ட உபரத்தினமும்சேர்த்து அணியலாம்.

தொழில் ரீதியாக ஆராய்ந்தால் பதவி உயர்வு வேண்டுவோரும், உயர் பதவியில் தற்போது இருப்பவர்கள், மேலும் அந்த பதவியில் அதிகாரம் பெற வேண்டும் என்று நினைத்தாலும் அவர்கள் மாணிக்கக் கல்லை அணிவது சிறந்த பலன் தரும். பதவி உயர்வு வேண்டுகின்றவர்கள் சூரியன் தங்களுடைய ஜாதகத்தில் வலுவாக திசா புத்தி நடத்தும் போது மாணிக்கம் அணியலாம் அல்லது சூரியன் நாகம் மற்றும் பாவ கிரகங்களின் பார்வை படக்கூடிய நிலையில் கோட்சாரத்தில் வரும்போது மாணிக்க கற்களை அணியலாம்.

அரசியலில் இருப்பவர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக இருப்பவர்கள் தொழிலதிபர்களாக இருப்பவர்கள் முதல் போட்டு தன்னுடைய சுய காலில் சுய சிந்தனையில் சுயபுத்தியில் தொழில் செய்பவர்கள் மாணிக்க கல்லை அணிந்து தங்களுடைய தொழில் ஸ்தலத்திற்கு செல்லும் போது அவர்களுடைய சிந்தனையும் செயலும் சிறப்பாக விளங்கும். அதிகாரம் செல்லுபடியாகும்.

பணியாட்கள் சொன்ன வேலையை செய்வார்கள். இதனால் அவர்கள் நினைத்த காரியம் நடக்கும். மாணிக்கம் உடலில் படும்படியாக ஓபன் கட் மோதிரம் செய்து அணிவது மிகவும் நல்லது. இத்தகைய மாணிக்கத்தால் சூரியனின் பலனை பெற்று உயர் அந்தஸ்தை பெறுவது சாத்தியமாகும்.

பித்ரு தோஷம் உள்ளவர்கள், தந்தைக்கு தோஷம் உள்ள ஜாதகத்தை உடையவர்கள், தந்தையின் அன்பைப் பெற இயலாதவர்கள், தந்தைக்கு நீடித்த நோய் இருப்பவர்கள், தந்தைக்கு தீராத வழக்கு சொத்து பிரச்சனை இருப்பவர்கள், தந்தை எப்போதும் வெளியூரில் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் அவரை பிரிந்து இருப்பவர்கள், தந்தையின் அன்பு கிடைக்காதவர்கள், மனநிலை சரியில்லாமல் பதட்டம், கோபம், ஆத்திரம் போன்ற சிக்கல்களில் தந்தை சிக்கி இருந்தால் இவர்கள் மேற்குறித்த பிரச்னைகள் தீர்வதற்கு சூரியனுக்கு உரிய மாணிக்கக் கல்லை அணியலாம். மகன் அல்லது மகள் மாணிக்கத்தை அணிந்தால் தந்தையின் நிலை சீரடையும்.

இவ்வாறாக ஒவ்வொரு மாணிக்கத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு நவரத்தினங்கள் மட்டுமல்லாது உபரத்தினங்களின் பலனையும் நாம் இனி ஒவ்வொன்றாக கண்டு தெளிவோம்.

தொகுப்பு: பிரபா எஸ். ராஜேஷ்

The post நல்வாழ்வு தரும் நவரத்தினங்கள் appeared first on Dinakaran.

Tags : Navaratnams ,
× RELATED பகை விலக்கும் கோமேதகம்