×

கும்மிடிப்பூண்டி அருகே 200க்கும் மேற்பட்ட வாத்துகள் உயிரிழப்பு


கும்மிடிப்பூண்டி: கெட்டனமல்லி ஊராட்சியில் மிக்ஜாம் புயல் மழை காரணமாக 200க்கும் மேற்பட்ட வாத்து குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தன. கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்டனமல்லி ஊராட்சியில் 1000க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த விக்ரம் சாய், ராஜு ஆகிய 2 குடும்பத்தினர் விவசாய பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாத்து குஞ்சுகளை வளர்த்து வருகின்றனர். கனமழை காரணமாக அனைத்து வாத்து குஞ்சுகளையும் பாதுகாக்கும் வகையில், தற்காலிக கூடாரம் அமைத்து இருந்தனர். ஆனால், நேற்றுமுன்தினம் மிக்ஜாம் புயல் மழை காரணமாக கனமழை பெய்தது. இதனால் அனைத்து வாத்து குஞ்சுகளும் இருக்கும் இடத்திலேயே மூழ்கின. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட வாத்து குஞ்சுகள் உயிரிழந்தன.

இதனை சம்பந்தப்பட்ட கால்நடை துறை அதிகாரிகள் இதுவரை சென்று பார்க்காதது குறிப்பிடத்தக்கது. இதில் ஏற்கனவே, உள்ள பத்தாயிரம் வாத்து குஞ்சுகள் நோய் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் இருப்பதாகவும் உரிமையாளர்கள் கூறுகின்றனர். எனவே, கெட்டனமல்லியில் இருந்து சிறுபுழல்பேட்டை செல்லும் விவசாய பகுதியில் உள்ள மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து வாத்துக் குஞ்சுகளை வேறு இடங்களில் மாற்ற வேண்டும் என, அப்பகுதியைச், சேர்ந்த சமூக ஆர்வலர்கள் திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இறந்து போன வாத்து குஞ்சுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் கோரியுள்ளனர்.

The post கும்மிடிப்பூண்டி அருகே 200க்கும் மேற்பட்ட வாத்துகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Mijam ,Ketanamalli ,
× RELATED எளாவூர் சாலையோர வியாபாரிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு