×

தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை அமைச்சர் டிராக்டரில் சென்று ஆய்வு


ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர் சக்கரபாணி டிராக்டர் மூலம் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து உணவு பொட்டலங்கள், பால், குடிதண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார். தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிக்ஜாம் புயலால் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரிகளில் ஒன்றான மணிமங்கலம் ஏரி, மண்ணிவாக்கம் ஏரி, ஆதனூர் ஏரி, மலைபட்டு, மாகாண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வந்தது. மேற்கண்ட 10க்கும் அதிகமான ஏரிகளில் இருந்து வெளியேறிய உபரிநீர் தாம்பரம் அருகே முடிச்சூர் அடுத்த கிருஷ்ணா நகர், பரத்வாஜ் நகர், அஷ்டலட்சுமி நகர், புவனேஷ்வரி நகர், குமரன் நகர், ராயப்பா நகர், முல்லை நகர், மகாலட்சுமி நகர், பாலாஜி நகர், பெரியார் நகர், கணேசபுரம், பிடிசி குடியிருப்பு, செந்தில் நகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நகர்களில் உள்ள குடியிருப்பு வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது.

இதனால், 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். வெள்ளத்தில் சிக்கியவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் ரப்பர் படகு மூலம் மீட்டு முகாம்களில் தங்க வைக்கபட்டனர். இந்நிலையில் தமிழக உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று பார்வையிட்டு வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் டிராக்டர் மூலம் வீடு வீடாக சென்று உணவு பொட்டலங்கள், பால், குடிதண்ணீர் வழங்கினார். இந்நிகழ்வில் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், பெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை ஆகியோர் உடன் இருந்தனர்.

இதேபோல் பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி பாஜ சார்பில் மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதர், மாவட்ட பொது செயலாளர் ஓம் சக்தி செல்வமணி, மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் நடராஜன், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் சதாம் உசேன், மண்டல தலைவர் ராஜரத்தினம், முன்னாள் மண்டல தலைவர் சிவக்குமார், விளையாட்டு பிரிவு மதன் குமார், ஐடி பிரிவு மண்டல தலைவர் செல்வம் ஆகியோர் வெள்ள பாதிப்பு பகுதியில் வீடு, வீடாக சென்று உணவு பொருட்களை வழங்கினர். அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்எல்ஏ பழனி, வரதாரஜபுரம் முன்னாள் துணை தலைவர் கோதண்டராமன் ஆகியோர் வரதராஜபுரம் பிடிசி குடியிருப்பு, பரத்வாஜ் நகர் ஆகிய பகுதிகளுக்கு சென்று நிவாரண பொருட்களை வழங்கினர்.

The post தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை அமைச்சர் டிராக்டரில் சென்று ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Sriperumbudur ,Minister ,Chakrapani ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...