×

சென்னையில் 6வது முறையாக பெருமழை வெள்ளம்: இந்தாண்டு மட்டும் சென்னையில் 2,000 மி.மீ. மழைப் பொழிவு


சென்னை: சென்னையில் 6வது முறையாக பெருமழை பெய்துள்ள நிலையில், இந்தாண்டு மட்டும் 2,000 மி.மீ. மழை பொழிந்துள்ளது. ஆண்டுதோறும் கனமழை பெய்வதும், சென்னை மிதப்பதும் கடந்த கால வரலாறாக இருந்தாலும், பெருமழை என்பது சென்னை வரலாற்றில் இடம் பெறக்கூடியதாகவே உள்ளது. அப்படி பார்த்தால் 47 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத பெருமழை தற்போது மிக்ஜாம் புயல் மூலம் பெய்து சென்னையை மிரட்டியிருக்கிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் 3 மாதங்களில் பெய்யக்கூடிய மழை ஒரே நாளில் பெய்து விட்டது. குறிப்பாக, மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணையில் மட்டுமே 2 நாட்களில் வரலாற்றில் கேள்விப்படாத வகையில் 73 செ.மீ. அளவுக்கு பெய்து மக்களை நிலை குலைய வைத்தது.

2015ல் ஒரே நாளில் பெய்த மழையை காட்டிலும், தற்போது 2023ல் ஒரே நாளில் பெய்திருக்கும் மழையின் அளவு அதிகம். கடந்த 2015 பெருவெள்ளத்தின் போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஒரே நாளில் சுமார் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திடீரென திறந்து விடப்பட்டது. ஆனால், இந்த முறை முன்கூட்டியே திட்டமிட்டு அவ்வப்போது தண்ணீர் திறந்து விடப்பட்டதால், இவ்வளவு கனமழை பெய்த போதும் அதிகபட்சமாக 8 ஆயிரம் கனஅடி மட்டுமே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உதவி செய்து வருகிறது. முக்கியமாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் விமானப் படை மூலம் உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை வரலாற்றில் 6வது முறையாக இந்தாண்டில் 2,000 மிமீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1976, 1985, 1996, 2005, 2015, 2023 ஆகிய ஆண்டுகளில் பெருமழை பதிவாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது: கடந்த 48 மணி நேரத்தில் நுங்கம்பாக்கத்தில் 469 மி.மீ.,(230/230 மி.மீ.,) மழை பெய்துள்ளது. ஆவடியில் அதிகபட்சமாக 48 மணி நேரத்தில் மிக அதிகபட்சமாக 564 மி.மீ.,(276/278மி.மீ.,) பெய்துள்ளது. பூந்தமல்லியில் 483மி.மீ.,(141/342 மி.மீ) மழையும் பெய்துள்ளது. சென்னை மாநகரில் ஞாயிறு இரவு முதல் திங்கள் இரவு வரை 24 மணி நேரத்தில் 40 முதல் 50 செ.மீ., மழை கொட்டியுள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்ததே கூவம் ஆற்றில் வெள்ளப் பெருக்கிற்கு காரணம். தாம்பரத்தில் 48 மணி நேரத்தில் 41 செ.மீ மழை பெய்ததால் அடையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பூண்டி ஏரியில் 45,000 கனஅடி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இது 2006 ஓக்னி புயல், 2008 நிஷா புயல், 2000 நிவர் புயல் ஆகியவற்றை காட்டிலும் அதிக மழையை வாரிக் கொடுத்துள்ளது. சென்னை மாநகரம் மிக்ஜாம் புயல் மூலம் 6வது முறையாக மிகப் பெரிய மழைப் பொழிவை சந்தித்துள்ளது. ஏனெனில் சென்னையின் மழை பொழிவு என்பது 2,000 மி.மீட்டரை கடந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

The post சென்னையில் 6வது முறையாக பெருமழை வெள்ளம்: இந்தாண்டு மட்டும் சென்னையில் 2,000 மி.மீ. மழைப் பொழிவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...