×

பணியாளருக்கு சம்பளம் தராமல் இழுத்தடிப்பு: தனியார் கப்பலை சிறை பிடிக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: ஆலப்புழா கண்ணமங்கலத்தைச் சேர்ந்த ஓமனக்குட்டன் மகன் நந்தகுமார். இவர் சென்னையைச் சேர்ந்த புரவலான் சரக்கு கப்பல் போக்குவரத்து பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.வி.புரவலானி (எ) எம்.வி.ரஹிமா என்ற சரக்கு கப்பலில் கடந்தாண்டு ஜூலை ஆயில் சரி பார்ப்பவராக வேலைக்கு சேர்ந்தார். 9 மாதத்துக்கு மாதம் 370 டாலர் சம்பளம் என்ற அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டார். அப்போது முன்பணமாக ரூ.50 ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கடந்த 13 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதையடுத்து, சம்பளம் மற்றும் இழப்பீட்டுத் தொகையுடன் ரூ.4 லட்சத்து 49 ஆயிரத்து 729ஐ வட்டியுடன் வழங்க எம்.வி.ரஹிமா கப்பல் நிறுவனத்துக்கு உத்தரவிடக்கோரி நந்தகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.முத்துச்சாமி ஆஜராகி, தற்போது எம்.வி.ரஹிமா கப்பல் மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்துள்ளது. இதுவரை மனுதாரருக்கு வழங்க வேண்டிய சம்பள தொகையை கப்பலின் உரிமையாளரான சென்னை நிறுவனம் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது என்றார். இதைக்கேட்ட நீதிபதி, தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள அந்த கப்பலை சிறை பிடிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 13ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

The post பணியாளருக்கு சம்பளம் தராமல் இழுத்தடிப்பு: தனியார் கப்பலை சிறை பிடிக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt ,CHENNAI ,Nandakumar ,Omanakuttan ,Kannamangalam, Alappuzha ,Puravalan Cargo Shipping Pvt ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...