×

மழைநீர் செல்ல முடியாமல் அடைப்பு; கால்வாயில் இறங்கி குப்பை அகற்றிய கவுன்சிலர்: புகைப்படம் வைரல்; பொதுமக்கள் பாராட்டு


பெரம்பூர்: அடைப்பு ஏற்பட்ட கால்வாயில் இறங்கி குப்பை கழிவுகளை அகற்றி மழைநீர் செல்ல வழி வகுத்த மாமன்ற உறுப்பினரின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சென்னையில் கனமழையால் பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டது. ஒவ்வொரு இடங்களிலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் களத்தில் இறங்கி மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், சென்னையில் மாமன்ற உறுப்பினர்களும் பல்வேறு மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரையும் மிஞ்சும் அளவிற்கு கால்வாயில் இறங்கி குப்பையை அகற்றிய 36வது வார்டு மாமன்ற உறுப்பினரின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 36வது வார்டு மாமன்ற உறுப்பினராக மலைச்சாமி உள்ளார். கடந்த 4ம் தேதி சென்னையில் இடைவிடாது மழை பெய்து கொண்டிருந்தது. அந்த சமயம் பெரும்பாலான தொலைத்தொடர்பு சாதனங்களும் வேலை செய்யவில்லை. அப்போது வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை பகுதியில் உள்ள வியாசர்பாடி கால்வாய் பகுதியில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால், அந்த கால்வாய் முழுவதும் தண்ணீர் செல்ல முடியாத அளவிற்கு அடைத்துக் கொண்டது. இதனால் பாரதி நகர், சாஸ்திரி நகர், பிவி காலனி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் செல்லும் நிலை ஏற்பட்டது. அந்த சூழலில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, களத்தில் இறங்கிய மாமன்ற உறுப்பினர் மலைச்சாமி மற்றும் திமுக நிர்வாகிகள் வியாசர்பாடி கால்வாய் பகுதியில் குதித்து, உடனடியாக அப்பகுதியில் தேங்கி கிடந்த குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை வேகமாக சுத்தம் செய்து, வெளியே எடுத்து போட்டனர். இதனால் அப்பகுதியில் தண்ணீர் வேகமாக வெளியேறியது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் மாமன்ற உறுப்பினரின் இந்த செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

The post மழைநீர் செல்ல முடியாமல் அடைப்பு; கால்வாயில் இறங்கி குப்பை அகற்றிய கவுன்சிலர்: புகைப்படம் வைரல்; பொதுமக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Perambur ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்காக...