×

வடசென்னை, தென்சென்னை பகுதிகளில் ஹெலிகாப்டரில் உணவு விநியோகம்: பால், குடிநீருக்காக மக்கள் தவிப்பு

சென்னை: வடசென்னை, தென்சென்னை பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் நேற்று உணவு விநியோகம் செய்யப்பட்டது. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெருமழை கொட்டித் தீர்த்தது. இதனால் புறநகர் பகுதிகள் தனித்தனி தீவுகள் போல் காட்சி அளிக்கிறது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடந்த 5 நாட்களாக வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்படுகிறார்கள். தமிழக அரசு மற்றும் தன்னார்வலர்கள் அவர்களுக்கு தேவையான உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறார்கள்.

ஆனாலும் அடுக்குமாடியில் உள்ள மக்களுக்கு போதுமான நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மழை விட்டு 3 நாட்கள் ஆகியும் அவர்களால் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. காரணம் 3 முதல் 6 அடி தண்ணீரில் அவர்கள் சிக்கி உள்ளனர். இதனால் வெளியே வந்து கடைகளுக்கு கூட செல்ல முடியவில்லை.

இதையடுத்து மாடிகளில் உள்ளவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதுபற்றி நேற்று முன்தினம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது, சென்னை அடையாறு ஐஎன்எஸ் ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து கடலோர காவல் படை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் மாலை இதற்கான ஒத்திகை பார்க்கப்பட்டது.

இதையடுத்து நேற்று வடசென்னை, தென்சென்னை பகுதிகளில் சுமார் 50 இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலம் வழங்கப்பட்டது. குறிப்பாக சென்னை, வேளச்சேரி, மடிப்பாக்கம், ராம்நகர், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிவாரண உதவிகள் கிடைக்க வழி செய்யப்பட்டது.

தங்கள் குடியிருப்புகளில் இருந்து மொட்டை மாடிக்கு வந்து ஹெலிகார்டரில் இருந்து வழங்கப்பட்ட உணவு பொட்டலங்களை அப்பகுதி மக்கள் பெற்றுக் கொண்டனர். அந்த பகுதிகளில் தண்ணீர் குறைந்து பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும்வரை ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேநேரம் வேளச்சேரி, பள்ளிக்கரணை, ராம்நகர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வெள்ள நீரில் சிக்கி வெளியே வர முடியாதவர்கள் குடிநீர் மற்றும் பால் கிடைக்காமல் தவித்து வருவதாக தெரிவித்தனர். மின்சாரம் இல்லாததால் அவர்களால் வெளியே தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் கேன் மற்றும் குழந்தைகளுக்கு பால் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

The post வடசென்னை, தென்சென்னை பகுதிகளில் ஹெலிகாப்டரில் உணவு விநியோகம்: பால், குடிநீருக்காக மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : North Chennai, South Chennai ,CHENNAI ,North Chennai ,South Chennai ,'Miqjam' ,
× RELATED மழை நீர் வடிகால் பணிகள்...