×

சேலத்தில் இருந்து சென்னைக்கு 80 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் வந்தது

சேலம்: சேலம் ஆவினில் இருந்து சென்னைக்கு கடந்த 3 நாட்களில் 80 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, புறநகர் பகுதிகள் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் வரலாறு காணாத அளவில் மிக அதிகன மழை கொட்டியது. இதனால், சாலைகள், வீடுகள் அனைத்தும் மழை நீர் சூழ்ந்து பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் போர்கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்றும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

சென்னையில் ஆவின் செயல்படும் சோழங்கநல்லூர், மாதவரம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பால் உற்பத்தியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் வகையில் ஆவின் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சேலம் ஆவினில் இருந்து 4ம் தேதி 20 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகளும், நேற்று முன்தினம் 30 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகளும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. அதேபோல் நேற்றும் 30 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நிலைமை சீரடையும் வரை சேலம் ஆவினில் இருந்து பால் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சேலம்ஆவினில் தினமும் 5.50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. உள்ளூர் தேவைக்கு தினமும் 2.25 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. 2 லட்சம் லிட்டர் பால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தற்போது மழை காரணமாக பால் பாக்கெட்டுகளாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 நாளில் 80 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன’ என்றார்.

The post சேலத்தில் இருந்து சென்னைக்கு 80 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் வந்தது appeared first on Dinakaran.

Tags : Salem ,Chennai ,Salem Avin ,Dinakaran ,
× RELATED தவறான சிகிச்சை: அரசு வேலை வழங்க பரிசீலிக்க சேலம் ஆட்சியருக்கு ஐகோர்ட் ஆணை