×

ஐதராபாத்தில் பிரமாண்ட விழா; தெலங்கானா முதல்வராக ரேவந்த்ரெட்டி இன்று பதவியேற்பு: கார்கே, சோனியா, ராகுல், பிரியங்கா வருகை

திருமலை: தெலங்கானா முதல்வராக ரேவந்த்ரெட்டி இன்று பதவியேற்க உள்ளார். இதில் பங்கேற்க காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல், பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தெலங்கானா மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 65 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இருப்பினும், முதல்வர் யார்? என்பதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏக்கள், தலைவர்கள் இடையே கடும் போட்டி நிலவியது. கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படவில்லை.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நேற்று முன்தினம் டெல்லியில் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தெலங்கானா மாநில மூத்த தலைவர்கள் பட்டி விக்ரமார்கா, உத்தம்குமார், கோமட்டிரெட்டி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். இதில் தெலங்கானா முதல்வராக ரேவந்த்ரெட்டியை ஒருமனதாக தேர்வு செய்தனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று முன்தினம் இரவு காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்தார்.

ஆனால் துணை முதல்வர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. இருப்பினும் , சபாநாயகர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்ட 20 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியலை கட்சி மேலிடம் நேற்று முன்தினமே தயாரித்து விட்டதாக தெரிகிறது. இவற்றை முதல்வராக பதவியேற்க உள்ள ரேவந்த்ரெட்டிக்கு காங்கிரஸ் மேலிடம் நேற்று மாலை அனுப்பி வைத்துள்ளது என்றும் அதன்பின்னர் ரேவந்த்ரெட்டி நேற்றிரவு தெலங்கானா கவர்னர் தமிழிசையை சந்தித்து அமைச்சர் பட்டியலை ஒப்படைத்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இதையடுத்து, இன்று ஐதராபாத்தில் உள்ள எல்பி ஸ்டேடியத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடத்தப்படுகிறது. முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் வர உள்ளதாக மாநில காங்கிரசார் தெரிவித்துள்ளனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

முதல்முறையாக காங்கிரஸ் ஆட்சி
ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிந்தபிறகு ஏற்கனவே நடந்த 2 சட்டமன்ற தேர்தல்களில் சந்திரசேகரராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சியே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதைத்ெதாடர்ந்து, 3வது முறையாக கடந்த மாதம் 30ம் தேதி 119 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. கடந்த 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில், ஆளும் கட்சியான பிஆர்எஸ் கட்சி 39 இடங்களை பிடித்து ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் 64 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதன் கூட்டணி கட்சியான இந்திய கம்யூ.1, பாஜக 8 இடங்கள், எம்ஐஎம் கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்றது. அம்மாநிலம் தொடங்கிய பிறகு முதல்முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது அக்கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post ஐதராபாத்தில் பிரமாண்ட விழா; தெலங்கானா முதல்வராக ரேவந்த்ரெட்டி இன்று பதவியேற்பு: கார்கே, சோனியா, ராகுல், பிரியங்கா வருகை appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Revantretti ,Telangana ,Karke, ,Sonia ,Rahul ,Priyanka ,Revandretti ,Congress ,president ,Garke ,Grand Festival ,Karke ,
× RELATED மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற...