×

குளச்சல் துறைமுகத்தில் வியாபாரிகள் வேலை நிறுத்தம்: டன் கணக்கிலான மீன்கள் விசைப்படகுகளில் தேக்கம்

குளச்சல்: குளச்சல் துறைமுகத்தில் சாவாளை மீன்கள் இறக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் இன்று திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விசைப்படகுகளில் இருந்து டன் கணக்கிலான மீன்கள் இறக்கப்படவில்லை.குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் ஆகியவை கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன. விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு சென்று 10 நாட்கள் தங்கியிருந்து உயர்ரக மீன்களான கேரை, கணவாய், இறால் போன்றவற்றை பிடிக்கின்றனர்.

பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் ஒரே நாளில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பிவிடுகின்றன. அவ்வாறு பிடிக்கப்படும் மீன்களை குளச்சல் மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வந்து, ஏலக்கூடத்தில் அவற்றை இறக்கிவைத்து விற்பனை செய்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு கரை திரும்பிய 3 விசைப்படகுகளில் ஏராளமான சாவாளை மின்கள் பிடிக்கப்பட்டிருந்தன.பொதுவாக அவற்றின் எண்ணிக்கை குறைந்துவருவதால் அரசு சாவாளை மீன் குஞ்சுகளை பிடிக்க தடை விதித்துள்ளது. மேலும் அவற்றை பிடிக்கவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே தடையை மீறி சாவாளை மீன்களை 3 விசைப்படகுகளில் பிடித்து வந்ததால், அவற்றை குளச்சல் துறைமுகத்தில் இறக்கி விற்பனை செய்ய ஏலக்காரர்கள், வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் மீனவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்கு இன்னும் தீர்வு காணப்படாத நிலையில், இன்று காலை முதலே சாவாளை மீன்களை இறக்கி விற்பனை செய்வதை எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக இன்று கரை திரும்பிய விசைப்படகுகளில் இருந்தும் டன் கணக்கிலான மீன்களும் இறக்கப்படவில்லை. இதனால் விசைப்படகுகள் துறைமுகத்திலேயே மீன்களுடன் காத்திருக்கின்றன.

மீன்களை இறக்கி வியாபாரம் நடக்காததால் மீன் ஏலக்கூடம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மீன்களை வாங்குவதற்காக வந்த வியாபாரிகள், உள்ளூர் மீனவர்கள் என பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.வியாபாரிகளின் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னக்கு விரைவில் தீர்வு காணப்பட்டு நாளை மீண்டும் வியாபாரம் தொடக்கப்படும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post குளச்சல் துறைமுகத்தில் வியாபாரிகள் வேலை நிறுத்தம்: டன் கணக்கிலான மீன்கள் விசைப்படகுகளில் தேக்கம் appeared first on Dinakaran.

Tags : Traders ,Kulachal port ,Kulachal ,Dinakaran ,
× RELATED வணிகர்களை பாதுகாக்க விசேஷ சட்டம்...