×

விடுவிக்கும் போது அமைதியாக இருக்க பிணைக் கைதிகளுக்கு போதை மருந்து கொடுத்த ஹமாஸ்: இஸ்ரேல் பரபரப்பு குற்றச்சாட்டு

டெல் அவிவ்: பிணைக் கைதிகளை விடுவிக்கும் போது அவர்கள் அமைதியாக இருப்பதற்காக ஹமாஸ் அமைப்பினர் அவர்களுக்கு போதை மருந்து கொடுத்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டி உள்ளது. இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிக்கும் முன் ஹமாஸ் தீவிரவாதிகள் அவர்களுக்கு போதைப்பொருள் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த அக்டோபர் 7ம் தேதி, ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் இருந்து சுமார் 240 பேரைக் கடத்திச் சென்றனர். இவர்களில் 105 பேர் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்படுவதற்கு சற்று முன்பு அவர்களுக்கு ‘க்ளோனெக்ஸ்’ என்ற மயக்க மருந்துகள் கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேலின் சுகாதார அமைச்சக பொது மருத்துவத் தலைவர் ஹகர் மிஸ்ராஹி கூறுகையில், ‘செஞ்சிலுவைச் சங்கத்திடம் இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஒப்படைப்பதற்கு முன்பு, அவர்களுக்கு ‘க்ளோனெக்ஸ்’ என்ற போதை மாத்திரைகளை ஹமாஸ் தீவிரவாதிகள் கொடுத்துள்ளனர். அதனால் விடுவிக்கப்பட்ட பிணையக் கைதிகள் அமைதியாக இருந்தனர். அவர்கள் அமைதியாக இருப்பதற்காக அவர்களுக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டுள்ளது’ என்றார். விடுவிக்கப்பட்டவர்களின் ரத்தப் பரிசோதனையின் அடிப்படையில் போதை மருந்து கொடுக்கப்பட்டதா? அல்லது அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தெரியவந்ததா? என்பது குறித்து மிஸ்ராஹி குறிப்பிடவில்லை. மேலும், எத்தனை பேருக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டது என்பது குறித்தும் அவர் தெரிவிக்கவில்லை.

The post விடுவிக்கும் போது அமைதியாக இருக்க பிணைக் கைதிகளுக்கு போதை மருந்து கொடுத்த ஹமாஸ்: இஸ்ரேல் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Hamas ,Israel ,Tel Aviv ,Dinakaran ,
× RELATED நீடிக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்;...